சமீபத்தில் தீபாவளிக்கு முன்பு கோவையில் சிறுவனையும்,சிறுமியையும் கடத்தி,சிறுமியை பாலியல் வன்முறைக்குள்ளாக்கி பின்பு இருவரையும் வாய்க்காலில் தள்ளி கொலை செய்த சம்பவத்தை யாரும் மறந்திருக்க மாட்டோம்.அந்த குற்றத்தை செய்த குற்றவாளிகளில் ஒருவனை போலீசார் போலி என்கவுண்டரில் சுட்டு கொன்றதையும்,அதை கோவை மாநகரமே பட்டாசு வெடித்து கொண்டாடியதையும் மறந்திருக்க மாட்டோம்.இப்போது ஒரு செய்தி.10/12/2010 தேதியிட்ட தினமலர் இதழில் பக்கம் எட்டில் வெளியான சம்பவத்தைப் பார்ப்போம்.நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடந்தது.ஜெயக்குமார் என்பவர் தான் கொத்தனாராக பணியாற்றிய வீட்டில் உள்ள மூன்று இளம் பிஞ்சுகளை கொடூரமாக கொலை செய்துள்ளான்.மணிகண்டன் எனும் பத்து வயது சிறுவன்,சங்கீதா எனும் பனிரெண்டு வயது சிறுமி,மேலும் ஓர் சிறுமி என மூன்று பேர்.இதில் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.இம்மூவரையும் கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளான்.இந்த சம்பவம் நடந்த ஆண்டு 2002 . குற்றவாளியை பிடிக்க முடியவில்லை.இந்த வழக்கு 2006 ஆம் ஆண்டு சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது.பின்பு 2008 ஆம் ஆண்டு குற்றவாளி பிடிபட்டான்.இரண்டு வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தண்டனையை பார்ப்போம்.
வீட்டிற்குள் மரணத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு,அத்துமீறி புகுந்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம்,கட்டத் தவறினால் மூன்றாண்டு சிறை.சம்பவத்தை மறைக்க முயற்சித்த குற்றத்திற்கு ஒரு ஆண்டு கடுங்காவல் மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம்,கட்டத் தவறினால் மூன்று மாதம் சிறை.பாலியல் பலாத்காரத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம்,கட்டத் தவறினால் மூன்றாண்டு கடுங்காவல்,கொலை செய்த குற்றத்திற்கு தூக்கு தண்டனை மற்றும் இருபதாயிரம் ரூபாய் அபராதம்,கட்டத் தவறினால் ஐந்தாண்டு சிறை,இரண்டு சிறுமிகளையும் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்ததற்காக இரண்டு ஆயுள் தண்டனை ,பத்தாயிரம் ரூபாய் அபராதம்,கட்டத் தவறினால் ஆறு ஆண்டு சிறை.கொடுஞ்செயல் புரிந்து நகைகளை கொள்ளையடித்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம்.கட்டத் தவறினால் ஐந்தாண்டு சிறை.இவை அனைத்தையும் குற்றவாளி ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமென்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலே குறிப்பிட்டுள்ள சம்பவம் ஒரு உதாரணமே.மேலும் இதைப் போல் பல
சம்பவங்கள் நடந்துள்ளன.கடந்த பத்தாண்டுகளில் சிறுவர்,சிறுமியர் மேலான கடத்தல்,பாலியல் துன்புறுத்தல்,கொலை போன்றவை கணிசமாக உயரத்தான் செய்துள்ளது.இவைகளைப் போன்ற எத்தனை சம்பவங்களை தமிழக மக்கள் அறிவார்கள்.இந்தக் குற்றங்கள் அனைத்தும் வட்டாரப் பத்திரிகைகளில் இரண்டு அல்லது மூன்று பத்தி செய்தியாக ஒரு ஓரத்தில் வெளியாகும்.கோவையில் நடந்த குற்றத்திற்கு
சம்பவங்கள் நடந்துள்ளன.கடந்த பத்தாண்டுகளில் சிறுவர்,சிறுமியர் மேலான கடத்தல்,பாலியல் துன்புறுத்தல்,கொலை போன்றவை கணிசமாக உயரத்தான் செய்துள்ளது.இவைகளைப் போன்ற எத்தனை சம்பவங்களை தமிழக மக்கள் அறிவார்கள்.இந்தக் குற்றங்கள் அனைத்தும் வட்டாரப் பத்திரிகைகளில் இரண்டு அல்லது மூன்று பத்தி செய்தியாக ஒரு ஓரத்தில் வெளியாகும்.கோவையில் நடந்த குற்றத்திற்கு
காரணமானவர்கள் கொடூரமனவர்களே அவர்கள் கொல்லப் பட வேண்டியவர்களே அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை.ஆனால் அவர்கள் மட்டும் பிடிபட்ட உடன் சுட்டுக் கொல்லப் பட காரணம் என்ன?இதை விட கொடுரமாக குழந்தைகளை துன்புறுத்தி கொன்றவர்கள் இதே கோவையில் இருக்கையில் இவர்களுக்கு மட்டும் ஏன் உடனடியாக சட்டத்திற்கு மீறிய வகையில் தண்டனை.இதை பட்டாசு வேறு வெடித்து கொண்டாடியிருக்கின்றனர் மக்கள்.கேட்டால் அவர்கள் நவீன நரகாசுரனாம்.அந்த குற்றவாளிகள் இருவரையும் உடனே கொல்ல வேண்டும்,அவர்கள் கொடூரர்கள்,அவர்களிடம் ஈவு,இரக்கமே காண்பிக்கக் கூடாது என்று எத்தனை போராட்டம்,கண்டனங்கள்.அதே போல் போலீசாரால் அந்த குற்றவாளிகளில் ஒருவன் கொல்லப்பட்ட போது அதைக் கொண்டாடி மகிழ்ந்ததென்ன?
அய்யா,பொதுமக்களே இதுவரை எத்தனை எத்தனையோ குழந்தைகள் கொடூரமான முறையிலும், மர்மமான முறையிலும் இறந்துள்ளனர்.அப்போதெல்லாம் எங்கே அய்யா சென்றிருந்தீர்கள்?ஏன் இப்போது மட்டும் இத்தனை ஆர்ப்பாட்டம்,ஆரவாரம்.இத்தனை நாட்கள் இல்லாத உணர்ச்சி இப்போது மட்டும் எப்படி பொத்துக் கொண்டு எங்கிருந்து வந்ததது.மேலே நீங்கள் படித்த செய்தி வந்த அதே தினமலரில் தலைப்பு செய்தி என்னவென்று தெரியுமா?கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் இளம் பிஞ்சு மாணவர்களை தோல் கன்னிப் போய்,உள் காயம் ஏற்படுத்து மளவிற்கு கைதிகளை படுக்க வைத்து பின்பக்கமாக லத்தி சார்ஜ் செய்வார்களே,அது போல் மிருகத் தனமாக அடித்து மிதித்துள்ளர்.இது முதல் பக்கத்தில் புகைப் படத்துடன் வந்துள்ளது.அதை பார்ப்பவர்கள் மனதில் கண்டிப்பாக வேதனையை உண்டு பண்ணும்.அந்த அளவிற்கு கொடிய மிருகத்தன செயல் அது.அந்த ஆசிரியர் எந்தளவிற்கு கொடிய மனம் படைத்தவராயிருப்பர் என்பதற்கு இது ஒரு உதாரணமே போதும்.அவரும் அந்த இரு குற்றவாளிகளைப் போலவே கொடூரமானவர்.ஆனால் இந்த சம்பவத்திற்கு அந்த குழந்தைகளின் பெற்றோரைத் தவிர வேறு யாரும் எந்த வித உணர்ச்சியையும் காட்டவில்லை.யார் பெற்ற பிள்ளை எப்படி போனால் நமெக்கென்ன என்ற நிலையில் பத்தோடு பதினொன்றாக இந்த செய்தியையும் படித்து விட்டு அடுத்த வேலையை கவனிக்க மக்கள் சென்று விட்டனர்.
மக்களே இப்போது உங்கள் உணர்ச்சிகள் அனைத்தும் எங்கே ஊர் மேயப் போயுள்ளது.அன்று மட்டும் அதனை வேகம் காட்டியவர்கள் இன்று எந்த சத்தமுமே இல்லாமல் இருப்பது ஏன்?பத்திரிகைகளும் ஓர் காரணம்.கோவையில் அந்த இரு குழந்தைகள் இறந்ததை விட கொடூரமான முறையில் பல குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.அப்போதெல்லாம் அதற்க்கு உரிய வகையில் முக்கியத்துவம் அளிக்காமல் பேப்பரின் ஏதோ ஒரு மூலையில் பெட்டி செய்தி போடுவது போல் போட்டு விட்டு,இதற்கு மட்டும் இத்தனை முக்கியத்துவம் கொடுத்தது ஏன்?அந்த இரு சிறார்கள் காணாமல் போனதிலிருந்து அந்த குற்றவாளிகளில் ஒருவன் கொல்லப்படும் வரையில்
அனைத்து பத்திரிகைகளையும் பார்த்தீர்கள் என்றால் எத்தனை எத்தனை செய்திகள்.இரண்டு,மூன்று பக்கம் முழுதாக அந்த செய்திகளும்,அவை தொடர்பான புகைப்படங்களும் என்று அனைத்து பத்திரிகைகளும் முந்தோ முந்தென்று செய்திகளை அள்ளி வழங்கின.அதே போல் மக்களையும் அந்த செய்திகள் மூலம் உசுப்பேற்றி விட மறக்கவில்லை.மக்களை தூண்டி விட்டு பட்டாசு வெடிக்க செய்ததின் மூலம் தங்களின் காரியத்திற்கு புண்ணியம் தேடிக் கொண்டது மட்டுமல்லாது,மக்களின் பாராட்டையும் பெற்று நல்ல பெயர் வாங்கிக் கொண்டனர் போலீசார்.
எத்தனையோ செய்திகள் பத்திரிகைகளில் பெட்டி செய்தியாகக் கூட வராமல் அனைவரும் அறியாமலே போனதுண்டு.சாவிலும் கூட ஒருவர் பணம் படைத்தவராக இருந்தால் மட்டுமே நீதி கிடைக்கும்.இல்லையென்றால் சீண்டுவதற்கு கூட ஆள் இருக்காது என்பதே இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.இது வரை பலியானது அனைத்துமே ஏழைக் குழந்தைகள்.அதனால் அவைகள் வெளிச்சத்திற்கு வராமலே போய் விட்டன.பணம் நீதியையும் ஏமாற்றி,மக்களையும் முட்டாளாகி விட்டது.மக்களே நீங்கள் உண்மையிலேயே உணர்ச்சித் துடிப்புள்ளவர்கள் ஆனால் கும்பகோணத்தில் தீயில் கருகி இறந்த பிஞ்சுகளுக்காக துடித்திருக்க வேண்டும்,தருமபுரி பஸ் எரிப்பு சம்பவம் நடந்த போது துடித்திருக்க வேண்டும்,மேலும் வேறு பல குழந்தைகள் கொல்லப்பட்ட செய்திகளை அறிந்த போது துடித்திருக்க வேண்டும்.அப்போதெல்லாம் துடிக்காமல் இந்த சம்பவத்திற்கு மட்டும் அதிகப்படியாக துடித்தது ஏன்?இவைகளை போல் அனைத்திற்கும் உங்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டியிருந்தால் நீங்கள் உண்மையான மக்கள்.
கொலைகாரர்களை கொல்ல வேண்டும்,அவர்களை உயிரோடு விட்டு வைப்பது வீண்,அரசாங்க பணம் வீண்,அவர்களை உடனடியாக போட்டுத் தள்ள வேண்டும்,சவூதி நாடுகளைப் போல சட்டம் வர வேண்டும்,அரசாங்கமும் போலீசாரும் ஒன்றும் செய்ய வேண்டாம் குற்றவாளிகளை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்றெல்லாம் பேசி ஆர்ப்பாட்டம் செய்தவர்கள்,அனைத்தும் முறைப்படிதான் நடக்க வேண்டும் என்று சொன்னவர்களையும் தாக்க சென்றவர்கள்.இவர்களைப் போன்ற திடீர்
உணர்ச்சி வசப்படுபவர்கள் அனைவரும் இது போன்ற ஓவ்வொரு குற்றத்திற்கும் குழந்தைகளுக்கு ஆதரவாக செயல் படுபவர்களா என்றால் கிடையாது.சட்டத்தின் மூலம் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கிடைக்கபெற்று அதன் மூலம் அவர்கள் கொள்ளப்பட்டு அதை இவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியிருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்.சட்டத்திற்கு புறம்பான வழியில் கொல்லப்பட்டதை கொண்டாடியிருப்பதுதான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இந்த உணர்ச்சியாளர்கள் அனைவரும் சட்டத்தை புறக்கணித்து இதை வரவேற்றுள்ளனர்.சட்டத்தை நீங்கள் இன்று உதாசீனப்படுத்தினால் நாளை உங்களுக்கு பிரச்சினை எனும் போது சட்டம் உங்களை உதாசீனப்படுத்தும்.
குழந்தைகளுக்கெதிரான அனைத்து குற்றங்களையும் எதிர்க்க வேண்டும்..அது ஏழையோ,பணக்காரனோ அவைகளை மறந்து ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.நியாயமான வழியில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர வேண்டும்.அதுவே மக்களின் கடமை.உணர்ச்சிகளை வெளிப்படுத்தி சட்டத்தை மதிக்காமல் போராடுவதல்ல.

