தலைப்பை பார்த்தவுடன் டென்சனாக வேண்டாம்.இது அரவிந்த சாமி,பிரபு தேவா,கஜோல் நடித்த 15 வருடங்களுக்கு முன்பு வந்த திரைப்படத்தைப் பற்றியது அல்ல.ஏனென்றால் அதைப் பற்றி பல பேர் விமர்சனம் என்ற பெயரில் கிழித்து எடுத்து விட்டார்கள்.பின்பு எதைப் பற்றியது என்கிறீர்களா?.இந்த மின்சாரகனவு கடந்த 4 வருடங்களாக தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கலைஞர் தயாரிப்பில்,ஆற்காடு வீராசாமி அவர்களின் இயக்கத்தில்,திரு ஆற்காடு வீராசாமி அவர்களே கதாநாயனகவும் நடித்திருக்கும் ''மின்சாரமே கனவு'' என்ற திரைப்படத்தை பற்றியது..இதன் மூலம் இயக்குனர்கள் கதாநாயகர்கள் ஆகும் வரிசையில் இவரும் சேர்ந்துள்ளார்.மேலும் இந்த திரைப்படத்தில் தமிழக மக்கள் அனைவரும் சிறப்பு பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷங்கர்,ரஜினியின் எந்திரனையும் மிஞ்சும் வகையில் மிகப் பிரம்மாண்டமான தயாரிப்பாக வெளி வந்து கடந்த 4 வருடங்களாக வெற்றிகரமாக தமிழகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது.இதை மிகச் சிறப்பான முறையில் தயாரித்திருக்கும் தயாரிப்பாளரையும்,அருமையான முறையில் இதை இயக்கியிருக்கும் இயக்குனரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.இதை வெற்றிப் படமாக ஆக்குவதற்கு இருவரும் மிகக் கடினமான உழைப்பை இப்படத்தில் கொட்டியிருக்கிறார்கள்.தயாரிப்பாளரும் இத்திரைப்படத்தில் ஒன்றிரண்டு காட்சிகளில் தோன்றி ரசிகர்களை பரவசப்படுத்தி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சரி இனி கதைக்கு வருவோம்.இப்படத்தில் கதை என்னவென்றால் இது ஒரு முற்றிலும் புதிய,இது வரை வெளி வராத,ஆங்கில படங்களுக்கு நிகரான ஒரு கதையாகும்.கதையில் அவரை அனைவரும் செல்லமாக ஆற்காட்டார் என்று அழைக்கின்றனர்.எனவே நாமும் இனி அவரை அவ்வாறே அழைக்கலாம். கதைப்படி இயக்குனர்,கதாநாயகர் ஆற்காட்டார் அவர்கள் தமிழகம் முழுவதிலும் மின்சாரம் தயாரிக்கும் தொழிற்சாலைகளை வைத்துள்ளார்.தினமும் அதில் தயாரிக்கும் மின்சாரத்தை மாதக் கட்டண அடிப்படையில் தமிழக மக்களுக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்.இந்த இடத்தில இன்னொரு கவனிக்கத் தக்க விஷயம் என்னவென்றால்,ஹீரோவே வில்லனாகவும் நடிக்கும் ஆன்டி ஹீரோ வேடத்தை ஏற்றிருக்கிறார்.இது போன்ற பாத்திரத்தில் முன்பே பலர் நடித்திருந்தாலும் இவரளவிர்ற்கு எவருமில்லை என்னுமளவுக்கு மிகச் சிறப்பாக தான் கொண்ட வேடத்தை செய்திருக்கிறார்.இப்போது கதைக்கு வருவோம்.இவ்வாறு மின்சாரத்தை விற்று அனைவரும் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது சிறு தடங்கல் ஏற்படுகிறது.கதாநாயகனை சுற்றி இருக்கும் நபர்கள்,நாம் தயாரிக்கும் மின்சாரத்தை நாம் ஏன் இவர்களுக்கு விற்று கொண்டிருக்க வேண்டும்?இவர்கள் நமக்கு என்ன செய்தார்கள்?,என்று உசுப்பேற்றி விட
கதாநாயகனும் இனி இவர்களுக்கு நான் கொடுப்பதுதான் மின்சாரம் என்று கிளம்புகிறார்.மின்சாரத்தை கண் மண் தெரியாமல் உபயோகப்படுத்தி,கண்டதற்கு எல்லாம் கரண்ட்,பகலிலேயே பல்ப்,என்று சொகுசாக மின்சாரத்தை பயன்படுத்தி பழகி விட்ட,தமிழக மக்களிடம் சென்று ஆற்காட்டார் அவர்கள்,இனி நான் எப்படி,எவ்வளவு மின்சாரம் தருகிறேனோ அதைத்தான் நீங்கள் உபயோகிக்க வேண்டும்.ஒரு நாளைக்கு 2 மணி நேரம் வீதம் மூன்று முறை நான் மின்சாரம் அளிப்பதை நிறுத்துவேன்,மீதி இருக்கும் நேரங்களில் மட்டுமே நீங்கள் மின்சாரத்தை உபயோகப்படுத்த வேண்டும் என்கிறார்.
என்னதான் மின்வெட்டு மக்களுக்கு பழகி போயிருந்தாலும் இது போல மின்வெட்டை அனுபவித்ததில்லை.ஆகவே கடும் அதிர்ச்சியடைந்த மக்கள் ஆற்காட்டாரை கேள்வி மேல் கேள்வி கேட்டு வருத்தேடுக்கின்றனர்.மேலும் மற்ற தொழிற்ச்சாலை அதிபர்களான அம்மா என்றும் ஜெ என்றும் மக்களால் அழைக்கப்படும் ஜெயலலிதாவும்,கேப்டன் என்று அழைக்கப்படும் புரட்சி கலைஞர் கருப்பு எம்.ஜி.ஆர் விஜயகாந்தும்,மற்ற சிறு குழுக்களின் தலைவர்களும் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்,அறிக்கை,வேலை நிறுத்தம் என பல ஸ்டன்ட் காட்சிகளை செய்து கதாநாயகனுக்கும்,அவரது குருவுக்கும் பலவித தொல்லைகளை தருகின்றனர்.இவர்களின் இன்னல்களை தாங்க முடியாமலும்,மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமலும் கதாநாயகன் தன் உதவிக்கு தனது குருவை அழைக்கிறார்.இந்த குரு வேடம் ஏற்றிருப்பவர் வேறு யாரும் அல்ல ,நமது தயாரிப்பாளர் கலைஞர் அவர்கள்தான்.அவரிடம் சென்று பிரச்சினையை விளக்கி கூறும் கதாநாயகன் என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்கிறார்.கதாநாயகனின் குருவும் மக்களிடம் சென்று நமது தொழிற்சாலைக்கு தேவையான மூலப்போருல்களான காற்று,மழை போன்றவை தட்டுப்பாடாக உள்ளதால் மின்சாரம் தயாரிக்க முடியவில்லை எனவும் இவை கிடைத்ததும் மீண்டும் மக்களுக்கு தங்கு தடையில்லாமல் மின்சாரம் கிடைக்கும் எனவும் கூறச் சொல்கிறார்.நமது கதாநாயகன் அவர்களும் அவ்வாறே மக்களிடம் சென்று கூறுகிறார்.ஏதோ ஓரளவிற்கு சமாதானமான மக்கள் அதை நம்பி சோகமாக திரும்ப செல்கிறார்கள்.இந்த இடத்தில் ஒலிக்கும் ''விடுகதையா இந்த வாழ்க்கை,விடை தருவார் யாரோ''என்ற பாடல் காட்சியுடன் மிகவும் ஒன்றி போய் உள்ளது.இதே பாடலை ''இருள்தான் இந்த வாழ்க்கையா?,ஒளி தருவார் யாரோ?''என்று ரீ-மிக்ஸ் செய்தவிதம் அருமையிலும் அருமை . இப்படியாக குறைந்த மின்சாரத்துடன் மக்கள் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் போது,பல புதிய கம்பெனிகள் தோன்றி யுபிஸ்,பாட்டரி,ஜெனரேட்டர் போன்ற புதிய மின் சாதனங்களை மக்களுக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன.இதைப் பார்த்த கதாநாயகன் இப்படியே போனால் மக்கள் தங்களுக்கு ஆதரவளிக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்டு ஒரு புதிய யோசனையில் இறங்குகிறார்.அவரும் அவர் குருவும் ஆலோசனை நடத்தி மக்களிடம் இனி உங்களுக்கு மின்சாரம் தடையில்லாமல் வழங்கப்படும் எனவும்,ஆனால் அதே சமயம் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் வீதம் மட்டுமே மின்சாரம் இருக்காது.மேலும் மாதத்தில் ஓரிரு நாட்கள் மட்டும் பத்து மணி நேரம் இருக்காது என்று சொல்கிறார்கள்.முற்றிலும் குழம்பி போயுள்ள மக்கள்,தெரியாத பேய்க்கு தெரிந்த பிசாசு எவ்வளவோ மேல் என்று ஏற்று கொள்கிறார்கள்.இனி மக்களின் நிலை என்ன ?எனும் கேள்வி எழும் நேரத்தில் இடைவேளை விடப்படுகிறது.படத்தை விட இடைவேளையில்
காட்டப்படும் தயாரிப்பாளர் கலைஞர் அவர்கள் நடித்த விளம்பரப் படங்கள் அனைவரையும் கவர்கிறது.இலவச டிவி,வீட்டு மனை,மருத்துவ காப்பீட்டு திட்டம் போன்ற பல விளம்பரங்கள் மக்கள் மனதை கொள்ளை கொள்கிறது.இடைவேளை வரை சூடாகவும் சுவையாகவும் சென்று கொண்டிருக்கும் திரைப்படத்தில் பின்பு மிகவும் இழுவை.மக்கள் ஏதோ இதுவாவது கிடைத்ததே என்று வாழ பழகி விட்டதாலும்,கதாநாயகன் மற்றும் அவர் குருவுக்கும் வேறு பல பிரச்சினைகள் இருப்பதாலும் கதையில் சுவாரசியம் குன்றி விட்டது.மேலும் கதாநாயகனின் குருவாகிய கலைஞர் தனது சாதுர்யத்தை பயன்படுத்தி அம்மா தனது பண்ணை வீட்டில் ஓய்வெடுக்க செல்வது போல் காட்டி காட்டி அவரை முடக்கி விடுகின்றனர்.அடுத்து தொடர்ந்து தனது அறிக்கைகளால் தொந்தரவு கொடுக்கும் கேப்டனையும் டம்மியாக்கி விடுகின்றனர்.கேப்டன் திரையில் தோன்றும் போது ரசிகர்கள் ஆரவாரமிட்டு வரவேற்கின்றனர்.அவர் மூலம் எதாவது திருப்பம் நிகழும் என எதிர்பார்க்கின்றனர்.ஆனால் ஆரம்பத்தில் பறந்து பறந்து அந்தரத்தில் சுற்றி சுழன்று சண்டையிடும் அவரை,அவருக்கு சொந்தமான திருமண மண்டபத்தை இடிப்பத்தின் மூலம் அடக்கி வாசிக்க வைக்கிறார்கள்.பொதுமக்களும் தங்களுக்காக குரல் கொடுக்க யாரும் இல்லை இனி நாமாகவே போராடுவோம் என்று களத்தில் குதிக்கும்போது தனது ராஜ தந்திரத்தின் மூலம் வேறு பல பிரச்சினைகளை மக்களுக்கு உண்டாக்கி அவர்களை அடக்குகிறார் கலைஞர் அவர்கள். உலக திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக முடிவு என்ற ஒன்று இல்லாத திரைப்படம் இது.முடிவு தெரிய வேண்டுமெனில் இத்திரைப்படத்தை இன்னும் ஒரு வருடம் தொடர்ந்து காணுங்கள்.தற்போது வரை கதாநாயகன் நடத்தி வரும் மின்சாரத் தொழிற்சாலை மேலும் அவர் வசமே இருக்குமா?அல்லது குருவிடம் சென்று சேருமா?இல்லை இருவருக்குமே இல்லாமல் புதியவரிடம் சென்று சேருமா?மக்கள் குறை தீர்க்கப்படுமா?
இது போன்ற பல கேள்விகள் இத்திரைப்படத்தை காணுவோர் மனதில் எழுகின்றது.இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் ஜூன் மாதம் வெளி வருகிறது.அப்போது அனைத்து கேள்விகளுக்கும் இரண்டாம் பாகத்தில் விடை கிடைக்குமென எதிர் பார்க்கபடுகிறது.
இதில் நடிப்பு எனும் வகையில் பார்க்கும் போது,கதாநாயகனின் நடிப்பு அவ்வளவு சிறப்பு இல்லை.பல இடங்களில் அவர் சமாளிக்க முடியாமல் திணறுவது வெளிப்படையாக தெரிகிறது.சில இடங்களிலே வந்தாலும் தயாரிப்பாளர் கலைஞர் அவர்களின் நடிப்பு மெய் சிலிர்க்க வைக்கிறது.அவர் வரும் இடங்கள் அனைத்தும் காமெடி,சோகரசம்,குடும்ப பாசம்,வீரம் என அனைத்தையும் அள்ளி தெளிக்கிறார்.இதனால் அவரை பார்த்ததும் மக்கள் எழுப்பும் ஒலி கொட்டகையையும் தண்டி வெளியே எதிரொலிக்கிறது.மேலும் அவரே இத்திரைப்படத்திற்கு கதை,வசனம்,பாடல்கள்,இசை போன்ற பல வேலைகளையும் சேர்த்து செய்துள்ளார்.என்னதான் ஆற்காட்டார் இதில் கதாநாயகனாகவும்,இயக்குனராகவும் இருந்தாலும் தயாரிப்பாளர் அவரை அடக்கி வாசிக்கும்படி அறிவுறுத்திய காரணத்தினால்,அவரால் தன் பங்கை சரிவர நல்க முடியவில்லை.இதில் கதாநாயகி இல்லாத குறையை அம்மா அவர்கள் தீர்த்து வைக்கிறார்.மேலும் இதில் அம்மா மற்றும் கேப்டன் என இருவர் இருந்தும் ஆக்சன் கட்சிகளுக்கு பஞ்சமோ பஞ்சம்.நமது ரசிகர்களும் கேப்டனின் சுவரில் தாவி தாவி எதிரியை அடிக்கும் கால் சண்டை இல்லாததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.மேலும் மக்கள் இதில் கௌரவ வேடம் ஏற்று நடித்திருப்பது நன்றாக இல்லை.ஏனெனில் படத்தில் உண்மையான கதாநாயகர்கள் அவர்கள்தான்.
வைகோ அவர்களும் இத்திரைப்படத்தில் உள்ளார் என்பது ஆச்சரியமாக உள்ளது.ஏனென்றால் அவர் திரையில் குறைவாக தோன்றினாலும் தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பாத்திரம் என்னவென்றே தெரியாமல் அவர் குழம்பி உள்ளது தெரிகிறது.அதனால் அவர் தனது திறமையை வெளிப்படுத்த இயலவில்லை.சிறு சிறு போராட்டங்களில் பங்கு கொண்டு தானும் கதாநாயகனுக்கு தொந்தரவு தரலாம் என எண்ணி செயல்படும்போது,கதாநாயகனின் குரு அவரை வேறு பல போராட்டங்களோடு தொடர்பு படுத்தி விட்டு அவரை முடக்குகிறார்.இந்திய அரசின் நமது காடுகளில் இருக்கும் புலிகளை காக்கும் திட்டம் பற்றி பேசாமல்,இலங்கையில் உள்ள காட்டு புலிகளை பற்றி பேசுகிறார் என்று அவரை குற்றம் சாட்டுகின்றனர்.ஆகவே அவரும் தன் பங்கை அதோடு முடித்து கொள்கிறார்.மேலும் இவர் அம்மாவோடு நட்புறவு கொண்டிருப்பதால் அவர் சொல்வதை கேட்க நேரிடுகிறது.
இத்திரைப்படத்தில் பல குறைகள் இருந்தும் காண்பதற்கு இனிய ஒரு ஒப்பற்ற காவியமாகும்.படத்தில் மொத்தம் 5 பாடல்கள்.அனைத்தும் சோகரசம் ததும்பும் பாடல்கள்.இருளுக்குள் இருக்கும் மக்கள் ''எங்கே சென்றாயோ?'' என்று கரண்ட் கம்பத்தை பார்த்து பாடும் பாடல் ஒன்றே போதும் இசை அமைப்பாளரின் திறமையை அறிய.கீரவாணி ராகத்தில் இது போல ஒரு பாடல் வந்ததில்லை எனும் அளவிற்கு இந்த மெட்டு மக்களால் விரும்பப்படுகிறது.மேலும் தங்கள் வீட்டில் டிவி,ஏசி,டிவிடி,போன்ற பல பொருட்களை வைத்திருக்கும் மக்கள் அவைகளை உபயோகிக்க மின்சாரம் இல்லாமல் புலம்பி பாடும் பாடலான ''சோதனை மேல் சோதனை'' பாடலும்,தங்கள் தேர்வு சமயத்தில் வீட்டில் மின்சாரம் இல்லாத காரணத்தால் படிக்க முடியாமல் திணறும் சிறுவனும் சிறுமியும் வீட்டில் உள்ள கரண்ட் கம்பிகளை பார்த்து ''வாராயோ வாராயோ''எனப் பாடும் பாடலும் படத்திற்கு வலு சேர்க்கும் பாடல்களாக உள்ளன.அம்மா,விஜயகாந்த் மற்றும் வைகோ அவர்கள் ஆகிய மூவரும் பாடும் ''வெற்றி கொடு'' என்ற பாடல் மிகவும் சிறப்பான முறையில் படமாக்கப்பட்டுள்ளது.இவர்கள் மக்களை பார்த்து பாடுவதாக இந்த பாடல் அமைந்துள்ளது.கலைஞர் மற்றும் கதாநாயகன்,தங்கள் குடும்பத்தோடு பாடும் பாடலான ''எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை''என்ற பாடல் ஒன்று மட்டுமே மகிழ்ச்சி பாடலாகும்.இந்த பாடல் காட்சியில் நடிப்பதற்காக சுமார் இருநூறு துணை நடிகர்கள் அழைத்து வரப்பட்டிருக்கின்றனர்.இந்த ஒரு பாடல் காட்சியைத் தவிர,படம் முழுவதும் மின்சாரம் இல்லாத காரணத்தால் காட்சிகள் அனைத்தும் இருளாகவே இருக்கின்றன.சுமாரான ஒளிப்பதிவு தான் .கதாநாயகன் பல தவறுகளை தவிர்த்திருந்தால் படம் தேசிய விருதையோ அல்லது ஆஸ்கார் விருதையோ பெற்றிருக்கும்.எடிட்டிங் எனும் படத்தொகுப்பில் விருவிருப்பில்லை.காட்சிகள் மெதுவாக நகர்வது போலுள்ளது.மனதை மயக்கும் காதல் காட்சிகளோ,ஆக்சன் காட்சிகளோ இல்லாதது ஒரு குறையே.ஆனாலும் இந்தப் படம் பல வருடங்களாக நேரம் மட்டும் அவ்வப்போது மாறிக் கொண்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
என்னதான் வெற்றிப்படமாக இருந்தாலும் அனைவரும் இதை பார்ப்பதை தவிர்க்க முயற்சி செய்து தோல்வியுருகின்றனர்.மொத்தத்தில் மின்சாரமே கனவு தயாரிப்பாளருக்கும்,கதாநாயகனுக்கும் பேரை வாங்கி கொடுத்தாலும்,ரசிகர்கள் மத்தியில் ஆதரவை பெற முடியவில்லை.இதை காண வரும் ரசிக கண்மணிகளுக்கு சோகத்தை மறக்க குவார்ட்டர் கட்டிங் எனும் குறும்படம் காட்டப்படுகிறது.இத்திரைப்படத்தை அனைவரும் இலவசமாக பார்க்க தினமும் இரண்டு மணி நேரம் அவரவர் இல்லத்திலும்,அலுவலகத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சில நேரங்களில் நாம் சற்றும் எதிர் பாராத நேரத்திலும்,நடு இரவிலும் இது காட்டப்படுகிறது.அனைவரும் தவறாது இதற்கு ஆதரவளிக்க வேண்டுமென தயாரிப்பாளர் தரப்பு விளம்பரங்களை ஒலி,ஒளி பரப்பி வருகிறது.என்னதான் விளம்பரங்கள் மூலம் மனதை மயக்கினாலும் படம் எங்களுக்கு பிடிக்கவில்லை எனக்கூறுகின்றனர் ரசிகர்கள்.
எப்படி இருந்தாலும் படம் ரசிகர்களின் மனதை கவரவில்லை என்பது தெரிகிறது.மின்சாரமே கனவு - வெறும் கனவு....
நமது விமர்சனக் குழு.
No comments:
Post a Comment