Friday, December 10, 2010

மக்களே மக்களே..........!

                    சமீபத்தில் தீபாவளிக்கு முன்பு கோவையில் சிறுவனையும்,சிறுமியையும் கடத்தி,சிறுமியை பாலியல் வன்முறைக்குள்ளாக்கி பின்பு இருவரையும் வாய்க்காலில் தள்ளி கொலை செய்த சம்பவத்தை யாரும் மறந்திருக்க மாட்டோம்.அந்த குற்றத்தை செய்த குற்றவாளிகளில் ஒருவனை போலீசார் போலி என்கவுண்டரில் சுட்டு கொன்றதையும்,அதை கோவை மாநகரமே பட்டாசு வெடித்து கொண்டாடியதையும் மறந்திருக்க மாட்டோம்.இப்போது ஒரு செய்தி.10/12/2010 தேதியிட்ட தினமலர் இதழில் பக்கம் எட்டில் வெளியான சம்பவத்தைப் பார்ப்போம்.நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடந்தது.ஜெயக்குமார் என்பவர் தான் கொத்தனாராக பணியாற்றிய வீட்டில் உள்ள மூன்று இளம் பிஞ்சுகளை கொடூரமாக கொலை செய்துள்ளான்.மணிகண்டன் எனும் பத்து வயது சிறுவன்,சங்கீதா எனும் பனிரெண்டு வயது சிறுமி,மேலும் ஓர் சிறுமி என மூன்று பேர்.இதில் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.இம்மூவரையும் கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளான்.இந்த சம்பவம் நடந்த ஆண்டு 2002 . குற்றவாளியை பிடிக்க முடியவில்லை.இந்த வழக்கு 2006 ஆம் ஆண்டு சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது.பின்பு 2008 ஆம் ஆண்டு குற்றவாளி பிடிபட்டான்.இரண்டு வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தண்டனையை பார்ப்போம்.
                                                 
                                                     வீட்டிற்குள் மரணத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு,அத்துமீறி புகுந்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை மற்றும் பத்தாயிரம்  ரூபாய் அபராதம்,கட்டத் தவறினால் மூன்றாண்டு சிறை.சம்பவத்தை மறைக்க முயற்சித்த குற்றத்திற்கு ஒரு ஆண்டு கடுங்காவல் மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம்,கட்டத் தவறினால் மூன்று மாதம் சிறை.பாலியல் பலாத்காரத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம்,கட்டத் தவறினால் மூன்றாண்டு கடுங்காவல்,கொலை செய்த குற்றத்திற்கு தூக்கு தண்டனை மற்றும் இருபதாயிரம் ரூபாய் அபராதம்,கட்டத் தவறினால் ஐந்தாண்டு சிறை,இரண்டு சிறுமிகளையும் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்ததற்காக இரண்டு ஆயுள் தண்டனை ,பத்தாயிரம் ரூபாய் அபராதம்,கட்டத் தவறினால் ஆறு ஆண்டு சிறை.கொடுஞ்செயல் புரிந்து நகைகளை கொள்ளையடித்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம்.கட்டத் தவறினால் ஐந்தாண்டு சிறை.இவை அனைத்தையும் குற்றவாளி ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமென்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
                       மேலே குறிப்பிட்டுள்ள சம்பவம் ஒரு உதாரணமே.மேலும் இதைப் போல் பல
சம்பவங்கள் நடந்துள்ளன.கடந்த பத்தாண்டுகளில் சிறுவர்,சிறுமியர் மேலான கடத்தல்,பாலியல் துன்புறுத்தல்,கொலை போன்றவை கணிசமாக உயரத்தான் செய்துள்ளது.இவைகளைப் போன்ற எத்தனை சம்பவங்களை தமிழக மக்கள் அறிவார்கள்.இந்தக் குற்றங்கள் அனைத்தும் வட்டாரப் பத்திரிகைகளில் இரண்டு அல்லது மூன்று பத்தி செய்தியாக ஒரு ஓரத்தில் வெளியாகும்.கோவையில் நடந்த குற்றத்திற்கு 
காரணமானவர்கள் கொடூரமனவர்களே அவர்கள் கொல்லப் பட வேண்டியவர்களே அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை.ஆனால் அவர்கள் மட்டும் பிடிபட்ட உடன் சுட்டுக் கொல்லப் பட காரணம் என்ன?இதை விட கொடுரமாக குழந்தைகளை துன்புறுத்தி கொன்றவர்கள் இதே  கோவையில் இருக்கையில் இவர்களுக்கு மட்டும் ஏன் உடனடியாக  சட்டத்திற்கு மீறிய வகையில் தண்டனை.இதை பட்டாசு வேறு வெடித்து கொண்டாடியிருக்கின்றனர் மக்கள்.கேட்டால் அவர்கள் நவீன நரகாசுரனாம்.அந்த குற்றவாளிகள் இருவரையும் உடனே கொல்ல வேண்டும்,அவர்கள் கொடூரர்கள்,அவர்களிடம் ஈவு,இரக்கமே காண்பிக்கக் கூடாது என்று எத்தனை போராட்டம்,கண்டனங்கள்.அதே போல் போலீசாரால் அந்த குற்றவாளிகளில் ஒருவன் கொல்லப்பட்ட போது அதைக் கொண்டாடி மகிழ்ந்ததென்ன?

                              அய்யா,பொதுமக்களே இதுவரை எத்தனை எத்தனையோ குழந்தைகள் கொடூரமான முறையிலும், மர்மமான முறையிலும் இறந்துள்ளனர்.அப்போதெல்லாம் எங்கே அய்யா சென்றிருந்தீர்கள்?ஏன் இப்போது மட்டும் இத்தனை ஆர்ப்பாட்டம்,ஆரவாரம்.இத்தனை நாட்கள் இல்லாத உணர்ச்சி இப்போது மட்டும் எப்படி பொத்துக் கொண்டு எங்கிருந்து வந்ததது.மேலே நீங்கள் படித்த செய்தி வந்த அதே தினமலரில் தலைப்பு செய்தி என்னவென்று தெரியுமா?கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் இளம் பிஞ்சு மாணவர்களை தோல் கன்னிப் போய்,உள் காயம் ஏற்படுத்து மளவிற்கு கைதிகளை படுக்க வைத்து பின்பக்கமாக லத்தி சார்ஜ் செய்வார்களே,அது போல் மிருகத் தனமாக அடித்து மிதித்துள்ளர்.இது முதல் பக்கத்தில் புகைப் படத்துடன் வந்துள்ளது.அதை பார்ப்பவர்கள் மனதில் கண்டிப்பாக வேதனையை உண்டு பண்ணும்.அந்த அளவிற்கு கொடிய மிருகத்தன செயல் அது.அந்த ஆசிரியர் எந்தளவிற்கு கொடிய மனம் படைத்தவராயிருப்பர் என்பதற்கு இது ஒரு உதாரணமே போதும்.அவரும் அந்த இரு குற்றவாளிகளைப் போலவே கொடூரமானவர்.ஆனால் இந்த சம்பவத்திற்கு அந்த குழந்தைகளின் பெற்றோரைத் தவிர வேறு யாரும் எந்த வித உணர்ச்சியையும் காட்டவில்லை.யார் பெற்ற பிள்ளை எப்படி போனால் நமெக்கென்ன என்ற நிலையில் பத்தோடு பதினொன்றாக இந்த செய்தியையும் படித்து விட்டு அடுத்த வேலையை கவனிக்க மக்கள் சென்று விட்டனர்.

                                              மக்களே இப்போது உங்கள் உணர்ச்சிகள் அனைத்தும் எங்கே ஊர் மேயப் போயுள்ளது.அன்று மட்டும் அதனை வேகம் காட்டியவர்கள் இன்று எந்த சத்தமுமே இல்லாமல் இருப்பது ஏன்?பத்திரிகைகளும் ஓர் காரணம்.கோவையில் அந்த இரு குழந்தைகள் இறந்ததை விட கொடூரமான முறையில் பல குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.அப்போதெல்லாம் அதற்க்கு உரிய வகையில் முக்கியத்துவம் அளிக்காமல் பேப்பரின் ஏதோ ஒரு மூலையில் பெட்டி செய்தி போடுவது போல் போட்டு விட்டு,இதற்கு மட்டும் இத்தனை முக்கியத்துவம் கொடுத்தது ஏன்?அந்த இரு சிறார்கள் காணாமல் போனதிலிருந்து அந்த குற்றவாளிகளில் ஒருவன் கொல்லப்படும் வரையில் 
அனைத்து பத்திரிகைகளையும் பார்த்தீர்கள் என்றால் எத்தனை எத்தனை செய்திகள்.இரண்டு,மூன்று பக்கம் முழுதாக அந்த செய்திகளும்,அவை தொடர்பான புகைப்படங்களும் என்று அனைத்து பத்திரிகைகளும் முந்தோ முந்தென்று செய்திகளை அள்ளி வழங்கின.அதே போல் மக்களையும் அந்த செய்திகள் மூலம் உசுப்பேற்றி விட மறக்கவில்லை.மக்களை தூண்டி விட்டு பட்டாசு வெடிக்க செய்ததின் மூலம் தங்களின் காரியத்திற்கு புண்ணியம் தேடிக் கொண்டது மட்டுமல்லாது,மக்களின் பாராட்டையும் பெற்று நல்ல பெயர் வாங்கிக் கொண்டனர் போலீசார்.

                              எத்தனையோ செய்திகள் பத்திரிகைகளில் பெட்டி செய்தியாகக் கூட வராமல் அனைவரும் அறியாமலே போனதுண்டு.சாவிலும் கூட ஒருவர் பணம் படைத்தவராக இருந்தால் மட்டுமே நீதி கிடைக்கும்.இல்லையென்றால் சீண்டுவதற்கு கூட ஆள் இருக்காது என்பதே இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.இது வரை பலியானது அனைத்துமே ஏழைக் குழந்தைகள்.அதனால் அவைகள் வெளிச்சத்திற்கு வராமலே போய் விட்டன.பணம் நீதியையும் ஏமாற்றி,மக்களையும் முட்டாளாகி விட்டது.மக்களே நீங்கள் உண்மையிலேயே உணர்ச்சித் துடிப்புள்ளவர்கள் ஆனால் கும்பகோணத்தில் தீயில் கருகி இறந்த பிஞ்சுகளுக்காக துடித்திருக்க வேண்டும்,தருமபுரி பஸ் எரிப்பு சம்பவம் நடந்த போது துடித்திருக்க வேண்டும்,மேலும் வேறு பல குழந்தைகள் கொல்லப்பட்ட செய்திகளை அறிந்த போது துடித்திருக்க வேண்டும்.அப்போதெல்லாம் துடிக்காமல் இந்த சம்பவத்திற்கு மட்டும் அதிகப்படியாக துடித்தது ஏன்?இவைகளை  போல் அனைத்திற்கும் உங்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டியிருந்தால் நீங்கள் உண்மையான மக்கள்.
                                        
                                      கொலைகாரர்களை கொல்ல வேண்டும்,அவர்களை உயிரோடு விட்டு வைப்பது வீண்,அரசாங்க பணம் வீண்,அவர்களை உடனடியாக போட்டுத் தள்ள வேண்டும்,சவூதி நாடுகளைப் போல சட்டம் வர வேண்டும்,அரசாங்கமும் போலீசாரும் ஒன்றும் செய்ய வேண்டாம் குற்றவாளிகளை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்றெல்லாம் பேசி ஆர்ப்பாட்டம் செய்தவர்கள்,அனைத்தும் முறைப்படிதான் நடக்க வேண்டும் என்று சொன்னவர்களையும் தாக்க சென்றவர்கள்.இவர்களைப் போன்ற திடீர் 
உணர்ச்சி வசப்படுபவர்கள் அனைவரும் இது போன்ற ஓவ்வொரு குற்றத்திற்கும் குழந்தைகளுக்கு ஆதரவாக செயல் படுபவர்களா என்றால் கிடையாது.சட்டத்தின் மூலம் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கிடைக்கபெற்று அதன் மூலம் அவர்கள் கொள்ளப்பட்டு அதை இவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியிருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்.சட்டத்திற்கு புறம்பான வழியில் கொல்லப்பட்டதை கொண்டாடியிருப்பதுதான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இந்த உணர்ச்சியாளர்கள் அனைவரும் சட்டத்தை புறக்கணித்து இதை வரவேற்றுள்ளனர்.சட்டத்தை நீங்கள் இன்று உதாசீனப்படுத்தினால் நாளை உங்களுக்கு பிரச்சினை எனும் போது சட்டம் உங்களை உதாசீனப்படுத்தும்.

                      குழந்தைகளுக்கெதிரான அனைத்து குற்றங்களையும் எதிர்க்க வேண்டும்..அது ஏழையோ,பணக்காரனோ அவைகளை மறந்து ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.நியாயமான வழியில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர வேண்டும்.அதுவே மக்களின் கடமை.உணர்ச்சிகளை வெளிப்படுத்தி சட்டத்தை மதிக்காமல் போராடுவதல்ல.

Sunday, December 5, 2010

கை கொடு.......

சன் டிவி,ராஜ் டிவி,விஜய் டிவி
ஜெயா டிவி,கலைஞர் டிவி,
மானாட மயிலாட,அசத்தப் போவது யாரு,
சூப்பர் சிங்கர்,மன்மதன் அம்பு
பார்த்துக் கொண்டிருந்த போது
இலங்கையில் தமிழச்சிகள்
வன்புணர்ச்சிக்கு ஆட்பட்டுக் கொண்டிருந்தனர்.
நாம் தமிழர்,
ராவணன் ஆண்டாலும்
ராஜபக்சே ஆண்டாலும்
நமெக்கென்ன கவலை என்று
தொடர் நாடகங்களில்
முளுகியிருந்தோம்.
தொலைக்காட்சி நாடகங்களில் 
ஒருத்திக்கு துன்பமென்றால்
துடிக்குது நம் மனது.
கண்ணெதிரே பல ஆயிரம்
பேர்,கண்டு கொள்ளவில்லை
 நம் மனது.
 கமல்,ரஜினி,
விஜய்,விக்ரம்,
அஜித்,சூர்யா,
த்ரிஷா,தமன்னா
அனுஷ்கா,ஷ்ரேயா
தவிர யார் செத்தால்
நமெக்கென்ன.
தன்னினம் அழிவதை
தானே வேடிக்கை பார்த்த
ஓரினம் நாமன்றோ தமிழா.
நாம் அனைவரும்
புத்திசாலிகள்தான் தனித்தனியே,
மொத்தமாக முட்டாள்கள்.
அதை கண்கூடாக பார்க்கிறோம்
தமிழகத்தில்.
புத்த மதம் தழுவியவர்கள் 
இன்று புலியாய் பாய்கிறார்கள்.
வீரன் சொறிந்த மறத் தமிழன்
இன்று மானம் கெட்டதேனோ?
முறத்தால் புலியை விரட்டினாள்
வீரத் தமிழச்சி அன்று.
வெறும் எலியைக் கூட
விரட்ட முடியாதவளாக்கி
விட்டனர் இலங்கையில் இன்று.

த்ரிஷாவும்,அனுஷ்காவும்
வரும் போது இமை மூடாமல் பார்க்கிறோம்,
இலங்கைத் தமிழர் இறப்பதை பார்த்தால்
சேனலை மாற்றுகிறோம்.
நாமல்லவா உண்மைத் தமிழர்.
நம் சகோதர,சகோதரிகள் இறந்து
கொண்டிருக்கையில்,நாம்
இந்த வருட சிறந்த
நடிக,நடிகையர் யாரென்று
விசனப் பட்டுக் கொண்டிருக்கிறோம்.
தமிழா........
நண்பா............
மைனா,
வ குவாட்டர் கட்டிங்,
மன்மதன் அம்பு,
எந்திரன்
இவற்றைத் தவிரவும்
இவற்றை எல்லாம் தாண்டியதும்
நம் வாழ்க்கை என்று உணர்வாயா?
நம் தமிழச்சிகள்
கற்பழித்துக் கொல்லப் பட்டுக்
கொண்டிருக்கும் போது
நீ கதை பேசி காலத்தை
போக்கிக் கொண்டிருக்கிறாய்
என்பதை உணர்வாயோ.........
நாளை வரலாறு
நமேக்கேதிரே திரும்பும்
என்பதையும் உணர்வாயோ........
பத்து வீடு தள்ளிதான்
தீஎரிந்து கொண்டிருக்கிறது.
பத்து நிமிடம் கூட ஆகாது
நம் வீட்டில் பற்றி எரிய.
வெட்டிக்கதை,பழங்கதை
பேசுவதை விட்டு
நிகழ்கதை உணர்.
நாம் அனுபவித்ததில்லை
சொந்த ஊரில்,சொந்த இடத்தில
அகதிகளாக வாழ்வதை.
அனுபவித்துக் கொண்டிருக்கிறது
நம் இனம்.
இலங்கையிலே இனக்கலவரம்
இங்கோ பணக்கலவரம் .
நாம் உதவாமல்
நம்மினத்திற்கு வேறொருவர்
உதவார்.
உன் உயிரைக் கொடுக்க வேண்டாம்
உன் குரலை மட்டுமாவது கொடு
போதும்.
அனைவர் குரலும் சேர்ந்தால்
விண்ணை முட்டும்
மண்ணை புரட்டும்.
உதவு.............
நீ
உதவ மறுத்தால்
உனக்குதவி மறுக்கப்படும்.
அழிவது நம்மினம்
வீழ்வது நம்மினம்
இனியும் வேடிக்கை
என்றால்,
தமிழா,
உன் அளவிற்க் கேற்றாபோல்
இடமுண்டு இடுகாட்டில்..........

Friday, December 3, 2010

ஈழ சகோதரிகளுக்கு............

ஆர்ப்பரித்து  அலையடிக்கும்  நீலக்கடல்  
தென்னை  மர  ஓலை  சத்தத்தோடு 
சேர்ந்து  இசைக்கும்  ஊர்க்குருவி
இதமான  காற்றோடு மணல் ஈரம்............

இத்தனையும்  ரசித்திட  இன்றைக்கு 
மனமில்லை 
இனி  என்றைக்குமே
மனமில்லை..............

முள்ளில்  வீழ்ந்த  சேலை  போல 
கயவர்களின்  கண்களில்  வீழ்ந்து
வன்முறையாய்  வன்புணர்ச்சிக்கு
ஆட்பட்டு  கொண்டிருக்கிறேன்..............  

 குண்டடித்தால்  பரவாயில்லை
சித்ரவதித்தால்  பரவாயில்லை
வெட்டினாலும்,குத்தினாலும்  பரவாயில்லை
ஆனால்,மாட்டிக்கொண்டது  காம  ஆயுதத்தில்..........

உடல்  நடுங்கிட,உள்ளம்  நொறுங்கிட
கைகள்  தளர்ந்தன,கால்கள்  துவண்டன
பேச்சு  இழுக்கிறது,மூச்சு  இழக்கிறது
இதயமே  நீ  நின்று  விடு ................

மரணப்படுக்கையில்  கூட
உணர்ந்ததில்லை  உயிர்வழியை
உணர்ந்தேன்  இன்று  இந்த
மணல்  படுக்கையில்..............

ஒன்றும்  அறியா  என்னுடலை
இன்று  நாராய்   ஆக்கி
சீரழித்து,சிறகொடித்து
உயிரேடுத்துக்கொண்டிருக்கிறார்கள்............

உடலிச்சை  தீர்ந்ததும்
மன  இச்சை  தீர்க்க
கொடூரமாய்  கொன்று விடுவரே
முன்னமே உயிர் போன என்னுடலை............

நேற்றொருத்தி,இன்று  நான்
நாளை  யாரோ,யாரறிவார்
தெரிந்திட்டால்  முடித்திடலாம்
வாழ்க்கையை  முன்னே.............

கண்ணெதிரே  கணவன்
கை  கட்டி,வாய்  பொத்தி
துப்பாக்கி  முனையில்
துயரமாய்  பார்த்தவாறு ..............

இரட்டைப்  படை  வயது  வந்தால்
இலக்காகிடுவோம்   நாங்கள்
சிங்கள  காடைகளுக்கு
ஆம்,சிங்கள  காடைகளுக்கு...............

புத்தர்  பூமியில்
புலியாகப்  போனான் அண்ணன் 
பலியாகிப்  போனான்  வன்னியில்,
நாங்கள்  கண்ணீரில் .................


தங்கை  வயது  பதினான்கு
வயிற்றில்  மாதம்  ஆறு
யார்  சொல்வர்
அதன்  அப்பன்  யாரென்று..............

தாயொரு  முகாம்
தந்தையொரு  முகாம்
அடிபட்டு  வதைபட்டு
நித்தமும்  துயருற்று  ...............


உறவினரெல்லாம்  ஓரிடத்தில்
அன்று,
உடல்கள்  எல்லாம்  எவ்விடத்தில்
இன்று .............

உள்   நாட்டவர்   உதவினால்
உயிரில்லை
வெளிநாட்டவர்  உதவியிலும்
வெளிச்சமில்லை............

எம்  பூர்வ  ஜென்ம
ஊரென்று  கேட்டோம்,
தமிழ்நாடு
உதவவேயில்லை ..................

சிங்களவன்  வந்தான்
சீனன்  வந்தான்
உடலைக்  கேட்டான்
நாங்கள்  உயிரை  விட்டோம் .............



வயதானவரென்றால்  முகாம்
ஆண்களென்றால்  கொலை
பெண்களென்றால்  புணர்ச்சி
இதுதான் இன்று எம் நிலை .............


முன்பு துரத்தினர்,பிடுங்கினர்
பின்பு அடித்தனர்,கொன்றனர்
கூட்டமாய் அடைத்தனர்
சலிப்படைந்தனர் போலும்................

மொத்தத்தில் முற்றிலும்
புதிதாய் யோசித்தனர்
அனைவரையும் புணர்ந்தனர்
தலைமுறையை தடம் மாற்றினர்....................

தமிழச்சி வயிற்றில் சீனன் குழந்தை
தமிழச்சி வயிற்றில் சிங்களவன் குழந்தை
தமிழ்ச் சீன,தமிழ் சிங்கள
கலப்பை கண்டறிந்தனர் .................



தமிழ் மரபை அளிக்க
ஒடுக்க,மறைக்க
புதியதோர் போர்முறையாம்
புதியதோர் தந்திரமாம்................ 

இன்னும் இன்னும்
எம்மக்கள் படும்பாடு
சொல்லவே முடியாது
சொன்னாலும் தீராது.........

உதவிக்களைக்கவும்  ஒருவருமில்லை
எம் தலைவனும் எம்மிடமில்லை
திரைப்படம்தான்
முக்கியமாம்
தங்கத் தமிழ்நாட்டிற்கு..............

மீண்டும் வீறு கொண்டேளுவோம்
அனைவரும் இறந்தாலும்
இறவாமல் காப்போம்
யாம் கொண்ட தமிழை...........

எங்கள் சிதையிலும்
பாதி  உயிருண்டு
அவை கொண்டு இனம்  காப்போம்
மீதி உயிர் காப்போம் .................



என்னுயிர் போனாலும்
மானம்  காத்திட மக்களுண்டு
பயந்திடப் பயமெதற்கு
பயந்தால் ஜெயமேதற்கு...........


போகிறேன் நான் வீர மங்கையாய் ...........

Wednesday, December 1, 2010

அம்பானி க்ரூப்பும் சினேகா இடுப்பும்....!

.           அம்பானி க்ரூபபுக்கும் சினேகா இடுப்புக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கறீர்களா?
இருக்கிறது.முதலில் அம்பானியை பார்ப்போம்.இந்தியாவின் பிரபல தொழில் அதிபரான முகேஷ் அம்பானி தனது காதல் மனைவி திருமதி நீதா அமபானிக்கு காதல் பரிசாக தருவதற்கு ஒரு பெரிய காதல் கோட்டையை மும்பை மாநகரில் கட்டியுள்ளார்.அதன் பெயர் அன்டிலியா.4532 சதுர அடியில் மிகப் பிரம்மாண்டமான முறையில் 27 மாடிகளுடன் அமைந்துள்ளது.160 கார்களை நிறுத்தும் வசதி படைத்த பெரிய தளம்,3 ஹெலிகாப்டர்களை மாடியில் நிறுத்த வசதியாக ஹெலிபேட்,தனியாக வாகனங்களை பராமரிப்பதற்கென்றே ஒரு தளம்,9 எலிவேட்டர்கள்,நீச்சல் குளங்கள்,மூன்றாம் மாடியில் 50 பேர் அமர்ந்து பார்க்கும் பெரிய திரையரங்கம்,யோகாசன மையம்,உடற்பயிற்சி நிலையம்,மூன்று மாடிகளில் தொங்கும் தோட்டம்,பாபிலோனியாவின் தொங்கும் தோட்டத்தை போல,மற்றும் முழுவதும் பனிக்கட்டிகளால் ஆன ஒரு தளம்,இதில் நுழைந்தால் நீங்கள் இமயத்திலோ  அல்லது ஆல்ப்ஸ் மலையிலோ பனியில் இருப்பது போல் உணர்வீர்கள்.இப்படி பட்ட வரலாற்று சிறப்பு மிக்க ஒரு மாளிகையை திரு முகேஷ் அம்பானி அவர்கள் மும்பையில் எழுப்பியுள்ளார்.இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 8000 கோடி ஆகும்.இம்மாளிகையில் முகேஷ் அம்பானி அவரது மனைவி மற்றும் இரு மகன்கள்,ஒரு மகள் என மொத்தம் ஐந்தே பேர் மட்டும் வசிக்க போகிறார்கள்.இந்த வீட்டில் பணி புரிய மட்டுமே அறுநூறு பேர் தேவைப்படுவார்கள்.ஐந்து பேர் வசிக்க இப்படி ஒரு குபேர அரண்மனை!.

முகேஷ் அம்பானியின் அன்டிலியா மாளிகை
                                                                    இதில் ஒரு தளம் முற்றிலும் தங்கத்தாலேயே இழைக்கப்பட்டுள்ளது.மேலும் விருந்தினருக்கென்று ஒரு தளம்.இதைப் போல ஒரு கோடீஸ்வர வீடு இந்தியாவில் இது வரை இருந்ததில்லை.இனியும் இதை போல ஒரு மாளிகை அமையுமா என்பதும் சந்தேகம்.வெளி நாடுகளை போல ஆடம்பரமான முறையில் அமைந்துள்ளது இந்த வீடு இல்லையில்லை மாளிகை அதுவும் இல்லை அரண்மனை.இதில் உள்ள முக்கிய விஷயம் தெரியுமா?திரு முகேஷ் அம்பானி அவர்கள் தனது வீட்டில் முதல் மாத மின் கட்டணமாக எவ்வளவு செலுத்தியிருப்பார் என்று நினைக்கிறீர்கள்.அசர வேண்டாம் அதிகமில்லை கம்மிதான்.சுமார் எழுபது லச்சது அறுபத்தி ஒன்பதாயிரத்து நானுற்று எம்பத்தி எட்டு ரூபாய் மட்டுமே.........
அதாவது எண்ணில் சொன்னால் 70,69488 ...!
                                                                                  நம் தமிழ்நாட்டு மின்சாரத்தை எல்லாம் எடுத்து உபயோகப்படுத்தியிருப்பாரோ என்று என்ன வைக்கக் கூடிய அளவிற்கு பயன்படுத்தி இருக்கிறார்கள் மின்சாரத்தை.இந்த தொகை நம் சாதாரண தமிழ்நாட்டு குடுமகனிடம் இருந்திருந்தால் அதை வங்கியில் வைப்பு நிதியாக வைத்து வாழ் நாள் முழுவதும் சாப்பிடுவார்கள்..
சினேகா மற்றும் அவரது இடுப்பை கிள்ளிய வாலிபர்(தாடியுடன் இருப்பவர்)
                              ஆனால் நடந்தது என்ன?.இந்த செய்தி பத்திரிகையில் வெளியான அன்று மற்றொரு சூடான சுவையான சம்பவமும் நம் தங்கத் திரு தமிழ்நாட்டில் நடந்தேறியது.தமிழ்நாடு ஈரோடு மாவட்டம்,பெருந்துறையில் உள்ள ஈமு கோழி இறைச்சி உணவகத்தை திறந்து வைத்து பின்னர் ஈமு கோழி பண்ணையை பார்வையிட சென்ற நமது தமிழ்நாட்டின் மிகபெரும் கனவுத் தாரகையும்,தேச முன்னேற்றத்திற்காக பாடுபடும்,ஏழை எளிய மக்களின் ஊக்க சக்தியும் ஆன திரைப்பட நடிகை இரண்டாம் சாவித்திரி சொப்பன சுந்தரி''ஸ்னேஹா'' வின் மத்தியப் பிரதேசமான இடுப்பு கிள்ளப்பட்ட நிகழ்ச்சி இனிதே நடந்தேறியது.அட இது என்னடா நம் குலக் கொளுந்துக்கு வந்த சோதனை என்றெண்ணி நடந்ததை மேலும் விரிவாக படிப்போம் என படித்தபோதுதான் தெரிந்தது.குலக் கொழுந்து சினேகா அவர்கள் மக்களுடன் மக்களாக நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்த போது அருகில் நின்றிருந்த வாலிபர் ஒருவர் அடிக்கடி நம் மங்கயர்க்கரசி சிநேகாளின் மேல் உரசிக்க் கொண்டும்,இடித்துக் கொண்டும் இருந்திருக்கிறார்.திடீரென்று சமயம் அழகாக வாய்த்தது.கிள்ளினாரே ஒரு கிள்ளு நறுக்கென்று.என்ன ஒரு தைரியம்,பின்பு என்ன.அஜித்,விக்ரம்,விஜய்,கமல் போன்றோரின் பொற்க்கரங்கள் கிள்ளிய அந்த அழகு இடுப்பை,ஏதோ ஒரு நாரக்கை கிள்ளினால் கோபம் வராதோ?.ஆனால் அந்த சமயத்திலும் பொறுமை காத்தார் நம் பொன்னகை இளவரசி சினேகா.
                                                            தனது இடுப்பை கிள்ளிய அந்த வாலிபரை அவர் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வெறும் திட்டியதோடு காவல் துறையிடம் புகார் அளிக்காமல் விட்டு விட்டார்.இந்த சம்பவம் படத்துடன் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது.அதில் சினேகா மற்றும் அவர் இடுப்பை கிள்ளிய தாடிக்கார வாலிபருடன் கோபமாக பேசுவது போல் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.அதில் சினேகாவின் இடுப்பை கிள்ளிய அந்த நபர்,சினேகா திட்டுவதை கேட்டு கொண்டு சிரித்து கொண்டுள்ளார்.அவர் அதை பெரிதாவே எடுத்து கொள்ளவில்லை போலிருக்கிறது.இந்த சம்பவமும் நடிகை சிநேகாவிற்கு புதிய விஷயம் அல்ல.ஏற்கனவே திருச்சியில் துணிக் கடை திறப்பு விழாவிற்கு சென்ற போது இதே போல் அவரது இடுப்பு கிள்ளப் பட்டது.புன்னகை இளவரசி சிநேகாவிற்கு மட்டும்தான் இதுபோல நடக்கிறது என்றெண்ணி விடாதீர்கள்.நமது நாளைய நம்பிக்கை நட்சத்திரம்,மானையும் மயிலையும் ஆட விட்டு வேடிக்கை பார்க்கும் நமீதா மற்றும் அங்காடித் தெரு படத்தில் நடித்த அஞ்சலி ஆகியோருக்கும் வேறு பல நடிகைகளுக்கும் இது போல பல சம்பவங்கள் நடந்துள்ளன.
                        நமது நாட்டில் வேலை வாய்ப்பின்மை,விலைவாசி உயர்வு,அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கம்,லஞ்ச லாவண்யம்,ஊழல்,கொலை,கொள்ளை,தொடர் மின்வெட்டு  போன்ற எத்தனையோ பிரச்சினைகள் இருக்கையில் நமது வாலிபர்களுக்கு நடிகைகளின் அங்கங்களை கிள்ளுவதும்,உரசுவதும்,கனவுலகில் அவர்களுடன் சல்லாபிப்பதும்தான் தற்போதைய முக்கிய பிரச்சினை போல் நடந்து கொண்டிருக்கிறார்கள்.அப்துல் கலாம் கனவு காணுங்கள்,கனவு காணுங்கள் என்று அடிக்கடிசொல்வதை இவர்களை போல இளைஞர்கள் தவறாக எண்ணி விடுகிறார்களோ என்னவோ?.அற்ப கிளுகிளுப்பிற்கு ஆசைப்பட்டு கொண்டு ஏன்தான் இதுபோல் தவறான பாதையில் செல்கிறார்களோ.இவர்களை போன்றவர்களின் மனம் முழுவதும் அசின்,த்ரிஷா,ஷ்ரேயா,நமீதாக்களால் நிரம்பபட்டுள்ளது.அதனால் தான் இவ்வாறு நடிகைகளின் மேல் ஆசைப்பட்டு,அவர்களால் கவரப்பட்டு தங்கள் சுய கௌரவத்தை இழந்து அனைவர் முன்னும் தலை குனிந்து நிற்க வேண்டிய சூழ்நிலை.
                                                      தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் சினிமாவினால் மிக மோசமான ஒரு வழியில் சென்று கொண்டிருக்கின்றனர்.இன்றைக்கு வெளி வரும் பாதி திரைப்படங்கள் இளைஞர்களை தவறான பாதையை நோக்கி செலுத்தி கொண்டிருக்கிறது.படங்களில் வரும் கதாநாயகர்கள் அனைவருமே வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக் கொண்டும்,சரக்கடிதுக் கொண்டும்,பள்ளிக்கு செல்லும் சிறு பெண்களை காதலித்துக் கொண்டும்,தாய் தந்தை பேச்சை கேட்காமல் ஊர் மேய்ந்து கொண்டும் உள்ளதாகவே காட்டுகிறார்கள்.இதனை பார்க்கும் ரசிகர்கள் மனதிலும் இவைகளை பதிய வைப்பதன் மூலம் ஒரு இளம் தலைமுறையே கெட்டு குட்டி சுவராக சீரழிந்து வருகிறது.அவனவன் இன்றைக்கு கம்ப்யூட்டர்,சாப்ட்வேர்,அமெரிக்கா,ஐரோப்பா,
மாதம் ஒரு லட்சம்,இரண்டு லட்சம் என காலில் ரெக்கை கட்டியது போல் ஓடி கொண்டிருக்க,இவர்களை போன்றவர்களோ சினேகாவின் இடுப்பு கிள்ளுவதற்கு உகந்ததா? என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.மேலும் தற்போதைய படங்களில் பெண்களை கரெக்ட் செய்வது எப்படி,பரிட்சையில் பிட் அடிப்பது எப்படி,பெற்றோரை சுலபமாக ஏமாற்றுவது எப்படி,குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பது எப்படி மேலும் இவளை எப்படி கூட்டிக் கொண்டு ஓட வேண்டும்,அடுத்தவன் மனை கவர்வது.....என்று அனைத்தையும் கற்றுத தருகிறார்கள்.மேலும் சினிமா போதாதென்று இப்போது சின்னத்திரையும் போட்டி போட்டுக் கொண்டு மக்களை மாக்களாகி வருகிறது.
                              இவைகளை பார்த்து கெட்டு அழிந்து மனம் சீரழிந்தவன் சினேகா இடுப்பை கிள்ளாமல்,தமிழ்நாட்டு தண்ணீர் தட்டுபாட்டயா தீர்த்து விட போகிறான்.சிலர் சொல்லலாம்,நடிகைகள் ஏன் அவ்வாறு தங்கள் உணர்ச்சிகளை தூண்டுவது போல் பொது இடங்களுக்கு வர வேண்டும்.அப்படி வந்தால் அப்படித்தான் கிள்ளுவோம் என்று.எங்கள் உணர்ச்சிகளையும் தூண்டி விட்டு பின்பு குய்யோ முறையோ என்றால் என்ன செய்வது என்றும் சொல்கிறார்கள்.ஒழுக்கமாக படித்து முடித்து ஒழுங்கான வேலைக்கு சென்றிருந்தால்,பெண்களின் பாகங்களை ஏன் தடவிக் கொண்டிருக்க போகிறீர்கள்.ஒரு வேலையும் இல்லாது வெட்டி வேலையை மட்டுமே கொண்டிருக்கும் காரணத்தால் தானே இம்மாதிரி வேலைகளுக்கு மனது அலைகிறது.நடிக,நடிகையர் வரும் இடங்களுக்கு சென்று அவர்களை வாயில் ஈ போவது கூட தெரியாமல் வேடிக்கை பார்த்து கொண்டு,பொழுதை போக்கி கொண்டு இருப்பவர்கள் இடுப்பை கிள்ளாமல்,அடுப்பை பற்ற வைத்து சமையலா செய்ய முடியும்.அதே போல் செய்வதையும் செய்து விட்டு அவர்கள் பார்பதற்கு கவர்ச்சியாக இருந்தார்கள்,உணர்ச்சிகளை தூண்டினார்கள்,மனதை சஞ்சலப் படுத்தினார்கள் என்று மொக்கை காரணம் கூறுபவர்களுக்கு......இதெல்லாம் நீங்கள் செய்யவில்லை,நீங்கள் பேசவில்லை....நீங்கள் இத்தனை நாள் பார்த்த சினிமா,டிவி போன்றவைகள்தான் செய்ய வைத்துள்ளது.
                                                                             கொஞ்சம் கொஞ்சமாக அவைகள் உங்கள் மனதில் ஊடுருவி விஷ விதைகளை தூவி தூபமிட்டு சமய சந்தர்பம் வைக்கும் போது உங்களை அத்தகைய காரியங்களில் ஈடுபட வைத்துள்ளது.அவைகள்தான் உங்கள் உணர்ச்சிகளை தூண்டி விட்டுள்ளது,அவைகள்தான் உங்களை செயலில் இறங்கவைக்கிறது.ஆகவே செய்வதையும் செய்து விட்டு மற்றவர்களின்மேல் பலியை போட வேண்டாம்.தங்கள் படம் ஓட வேண்டும் என்பதற்காக அந்தப் படங்களில் வன்முறை,கட்டவிழ்த்த கவர்ச்சி,ஆபாசம்,பாலியல் செய்கைகள் போன்றவற்றை உங்கள் மேல் திணித்து ரசிக்க வைத்து லாபம் அடைகின்றனர்.சாதாரண ரசிகனும் அவைகளை பார்த்து பார்த்து மனதில் ஏற்றி சமயம் வரும் போது செயலில் நிறைவேற்றுகின்றான்.
இதுவே நீங்கள் நன்கு படித்து நல்ல வேலையில் இருந்தால் இந்த மாதிரி வேலைகளுக்கு ஏது நேரம்.உங்கள் வேலையை கவனிக்கவே நேரம் இல்லாத போது,சினேகா,நமீதாவையா போய் பார்த்து கொண்டிருப்பீர்கள்.ஒன்றும் இல்லாமல் சும்மா இருக்கும் போதுதான் இம்மாதிரி வேளைகளில் மனம் ஈடுபடும்.
                                      முகேஷ் அம்பானி அவர்கள் இம்மாதிரி சிறு பிள்ளை விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தால் சுமார் எட்டாயிரம் கோடியில் வீட்டை கட்டியிருக்க முடியுமா?அவர் அவ்வளவு தொகையில் ஐந்தே பேர் வசிக்க பெரிய அரண்மனையை கட்டி குடி புகுந்து கொண்டிருக்கும் வேளையில்,நமது ஆட்களோ இங்கு சினேகாவின் இடுப்பில் குடி புகுந்து கொண்டிருக்கிறார்கள்.மகாத்மா காந்தி,நேரு,காமராஜர்,சுபாஷ் சந்திர போஸ்,ராஜாஜி,பகத் சிங்,திருப்பூர் கோடி காத்த குமரன்,பாலா கங்காதர திலகர் போன்ற தலைவர்கள் இம்மாதிரி சில்மிச வேளைகளில் ஈடுபட்டிருந்தால் சுதந்திரம் எனும் சொல்லை நாம் அப்துல் கலாமின் கனவுகளில் மட்டுமே காண வேண்டியிருக்கும்.இந்த சில்லறை வேலைகளை செய்ய போயிருந்தால் முகேஷ் அம்பானி இன்று அவர் அரண்மனை கட்டியிருக்கும் அதே மும்பையில் குடிசை வாசியாகதான் இருந்திருப்பார்.அவர் தந்தை பெரிய கோடீஸ்வரர் அதனால் அவரும் பெரிய பணக்காரர் என்றால்,அவர் தந்தை சேர்த்து வைத்ததை ஊதாரித்தனமாக செலவழிக்காமல் கட்டி காத்து அதை மென் மேலும் பெருக்கி,இன்று அதை மாபெரும் மூலதனமாக்கி காட்டியுள்ளார்.அவர் இதை போல வேளைகளில் ஈடுபட்டிருந்தால் எவ்வளவு செல்வம் இருந்தும் என்ன பயன்?அது வேட்டியாகதான்   போயிருக்கும்.....அதை போலவே இடுப்பை கிள்ளுபவர்கள்,முதலில் சுய கட்டு பாடு,தனி மனித ஒழுக்கம் இல்லாமல் பணம் சம்பாதித்து என்ன பயன்?
                                                         கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னதை நடிகைகளுடன் சல்லாபிப்பதாக கனவு காணும் இத்தகைய நபர்கள்,கலாம் காணச் சொன்ன கனவு நம்முடைய எதிர்காலத்தை பற்றி,வாழ்க்கையை பற்றி என்று அறியாத இவர்கள்,என்ன அறிவுரை சொன்னாலும்,எப்படி வாய் கிழிய பேசினாலும்,எத்தனை பெரியார்கள் வந்தாலும்,...............................மேலும் அடுத்தது யாருடைய இடுப்பு,த்ரிஷா இடுப்பா?தமன்னா இடுப்பா? இல்லை நயன்தாரா இடுப்பா? என்று தான் கனவு கண்டு கொண்டிருப்பார்கள்.

 

Tuesday, November 30, 2010

''சாமி அய்யப்பனும் வ குவாட்டர் கட்டிங்கும்''.............!!!!!!!

சாந்த சொருபீயாக,புலி வாகனத்தில்...
                          முதலில் தலைப்பிற்கு வருவதற்கு முன் ஐயப்பன் மற்றும் மாலை அணிவது போன்ற சில விசயங்களை பார்ப்போம்.முன்பு ஒரு காலத்தில் சபரிமலை ஒரு சாதாரண சிறிய கோவிலாகவே இருந்தது.அதிகமாக கேரளத்தில் வசிக்கும் மலையாள மக்களே விரதம் இருந்து மாலை அணிந்து ஐயப்பனை தரிசித்து வந்தனர்.அப்போதும் கேரளத்தை தவிர வேறு பல ஊர்களில் இருந்தும் மாலையணிந்து வந்தனர்.நாட்கள் செல்ல செல்ல அங்கு சென்று வந்தோர் வாயிலாகவும்,சக்தி வாய்ந்த சுவாமி ஐயப்பன் என்று பலர் சொன்னதாலும்,மற்ற மீடியாக்களின் மூலமாகவும்,ஐயப்பனின் புகழ் அருகிலுள்ள பல மாநிலங்களுக்கும் பரவியது.முக்கியமாக கேரளத்தின் அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் பரவியது.தமிழ்நாட்டிலிருந்தும் ஏராளமானோர் சபரி மலைக்கு மாலையணிய ஆரம்பித்தனர்.1985 இருந்து 1995 வரை இப்போது நாம் கேட்கும் பல புகழ் பெற்ற அய்யப்ப பக்தி பாடல்கள் வெளி வந்தன.ஐயப்பன் பாடல்களை பாடியே பிரபலமானவர் வீரமணி.இவர் பாடல்களுக்கு ஐயப்பனே பக்தர்களின் உடலில் வந்தததை போல ஆடுவார்கள்.ஐயப்பன் தான் விட்ட அம்பு எங்கு சென்று விழுகிறதோ,அங்கு நான் கோவில் கொள்வேன் என்று சொல்லி விட்ட அம்பு சபரிமலையில் விழுந்தது.சொன்னது போலவே அய்யப்பனும் இன்று வரை அங்கு வரும் பக்தர்களுக்கு அருள் வழங்கி கொண்டிருக்கிறார்.வாகனமாய் புலியை கொண்டு கையில் வில் அம்புடன் சாந்தமாக தோற்றம் தரும் ஐயப்பன் ஒரு தீவிர பிரம்மச்சாரி ஆவார்.கோவிலில் தன் முழங்கால்கள் நெஞ்சுக்கு நேராக  இருக்குமாறு,தன் கைகள் இரண்டையும் முழங்கால்களின் மேல் வைத்து ஆசி தரும் நிலையில் இருப்பார்.இவரின் முக்கியமான ஒரு விஷயம்,பிரம்மச்சரியம்.அய்யப்பனிடம் நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சொன்ன போது,எப்போது என் கோவிலுக்கு கன்னி சாமிகள்(முதல் முறையாக மாலையணிபவர்) வராது போகிறார்களோ அப்போது என் பிரம்மச்சரியம் களைந்து திருமணம் செய்வேன் என்றார்.தற்போது உள்ள நிலையில் அது நடப்பது மிகவும் கடினமே.ஏனென்றால் ஒவ்வொரு வருடமும் புதிதாக மாலை அணிந்து கன்னி சாமியாக சபரி மலை செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுதான் வருகிறது.எனவே ஐயப்பனின் சபதம் நிறைவேறுவது கடினம்.
                                                                       மேலும் காலம் ஆக ஆக அய்யபனது புகழ் விஸ்வ ரூபம் எடுக்கத் தொடங்கியது.தற்போது மேற்கு வங்காளம்,பீகார்,ஒரிசா,ம பி,யு பி மற்றும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஐயப்பனை தரிசிக்க படையெடுத்து வருகின்றனர்.இப்படி புகழ்,மக்கள் கூட்டம் என அதிகரித்த ஐயப்பன் கோவில் அதன் மூலம் பெரிதும் ஆனது.ஐயப்பனை வருடம் முழுவதும் தரிசிக்கலாம் என்றாலும்,விரதமிருந்து மாலையிட்டு தரிசிக்க செல்ல கார்த்திகை மாதமே மிகவும் சிறந்த மாதமாகும்.இம்மாதத்தில் தான் அனைவரும் கூட்டம் கூட்டமாக சென்று தரிசிப்பர்.சாதரணமாக தரிசிக்க முடியாது.நாற்பது நாட்கள் விரதமிருந்து,இருமுடி கட்டி செல்ல வேண்டும்.ஐயப்பனை தரிசிக்க சிலபல விதிமுறைகள் உண்டு.மாலையணிந்து விரதமிருப்போர் காலில் செருப்பணிய கூடாது,இரவில் வெறும் தரையில்தான் உறங்க வேண்டும்,தினமும் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில்தான் குளிக்க வேண்டும்,விரதமிருக்கும் நாட்களில் பெண்களை மனதால் கூட நினைக்க கூடாது,அதாவது பிரம்மச்சரியம் கடைபிடித்தால்,கெட்ட வார்த்தைகளை பேசுவது கூடாது,தீய பழக்கங்களை செய்யக் கூடாது என்பது போன்று பல கட்டுபாடுகள் உண்டு.இந்த கட்டுபாடுகள் அனைத்திற்கும் காரணமும் உண்டு.ஐயப்பனை தரிசிக்க செல்லும் உங்கள் உடலினையும்,மனதினையும் உறுதி செய்யவே இத்தகைய கட்டுபாடுகள்.உடல்,மன கட்டுப்பாடுகள் உள்ளவர்கள் மட்டுமே ஐயனை தரிசிக்க முடியும்.
பம்பை ஆறு
                 இந்த ஒவ்வொரு கட்டுப்படும் எதற்கு,வெறும் தரையில் ஏன் படுக்க வேண்டும்?.நீங்கள் ஐயப்பனை தரிசிக்க செல்லும் இடம் கோவில் அமைந்துள்ள இடம் கரடு முரடான ஒரு மலை.நீங்கள் இருமுடி கட்டி மலையில் அய்யப்ப தரிசனத்திற்கு  செல்லும் போது வழியில் ஓய்வெடுக்க வேண்டுமென்றால் கரடு முரடான மலைப்பாதையில்தான் தங்க வேண்டும்.அப்போது உங்கள் உடல் அந்த சூழ்நிலையை தாங்கும் வலிமை வேண்டும் என்பதற்காவே தான் வெறும் தரையில் உறங்குவது.உங்கள் கால்கள் கரடு முரடான பாதையை தாங்க வேண்டும் என்பதற்காவே தான் நீங்கள் விரத நாட்களில் வெறும் காலில் நடப்பது,மேலும் அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது ஏன்?..ஐயனை காண செல்லும் இந்த கார்த்திகை மாதம் குளிர் காலமாகும்.அங்கு சபரிமலையில் நீங்கள் பம்பை ஆற்றில் குளிக்க இறங்கும் போது தண்ணீர் ஐஸ் கட்டியை போல இருக்கும்.அதை  தாங்குவதற்கு தினமும் அதிகாலை குளிர்ந்த நீராடல்.இப்படி ஒவ்வொரு விதிகளும் பக்தர்களின் மனம் மற்றும் உடல் கட்டுப்பாட்டையும் உறுதியையும் வலுப் பெறச் செய்வதற்கென்றே உருவாக்கப்பட்டன.இந்த வகைகளில் எல்லாம் கட்டுபாட்டுடன் இருந்து அய்யன் தரிசனம் செய்வோர் வாழ்வில் மங்கலம் உண்டாகும் என்பது அய்யப்ப பக்தர்களின் கருத்து.
                                                                 ஆனால் இன்றைய உண்மை நிலை என்ன?.நீங்கள் மது அருந்துபவராக இருந்தால் தெரியும்.இல்லையென்றால் சும்மாவேனும் டாஸ்மாக் பாருக்கு சென்று பாருங்கள்.''சாமிக்கு தனி கிளாஸ் குடு'' என்ற சத்தம் ஒலிக்காத பார் தமிழ்நாட்டில் எங்கு தேடினாலும் கிடைக்காது.தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பக்தி மறைந்து பய உணர்வு மறைந்து சாமிகள் அனைவரும் வெளிப்படையாக அனைத்தையும் செய்கிறார்கள்.இப்போதெல்லாம் மாலை போடுவது என்பது பாஷன் ஆகி விட்டது.ஜீன்ஸ் அணிவது போல்,புதிதாக வரும் ஸ்டைல் கலை பின்பற்றுவது போல்.எல்லோரும் மாலை போடுகிறார்கள்,நானும் விட்டேனா பார் என்று கண்ட ஜென்மங்கள் எல்லாம் மாலை அணிந்து தெருவில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.இவர்கள் மாலை அணிந்த தோற்றத்துடனேயே பீடி,சிகரெட்,பாக்கு,மது என்று எல்லா வித போதை வஸ்துக்களையும் உபயோகப்படுத்தி,உண்மையான அய்யப்ப பக்தர்களையும் சேர்த்து அவமதிப்புக்கு உள்ளாக்குகின்றனர்.இவர்களுக்கு மாலை போடுவது என்பது ஒரு பொழுதுபோக்கு,ஸ்டைல்....இப்படிப்பட்ட ஜன்மங்களை எல்லாம் ஐயப்பனின் வாகனமான புலியை விட்டு கடிக்க செய்ய வேண்டும்.அய்யப்ப மாலை அணிவதே அணைத்து விதமான கேட்ட பழக்கங்களையும் கைவிட்டு திருந்துவதற்கு,அப்படி இருக்கும் போது எந்த வித மன உறுதியுமே இல்லாத இந்த நபர்கள் ஏன் மாலை அணிந்து அவர்கள் பேரையும்,ஐயப்பன் பேரையும்,உண்மையான பக்தர்கள் பேரையும் கெடுக்க வேண்டும்.கெட்ட பழக்கங்களை விட மன உடல் உறுதி இல்லாதவர்களான இவர்கள்,மாலை அணிந்தால் மட்டும் அய்யப்பனகாவே மாறியா விடப் போகிறார்கள்?.மாலை போட்டாலும் அணைத்து கெட்ட பழக்க வழக்கங்களையும் தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள்.முதலில் மாலை அணிந்திருக்கும் போது பீடியையே ஒளிந்து ஒளிந்து பிடித்து கொண்டிருந்தவர்கள் காலம் செல்ல செல்ல பகலிலேயே பாரில் ஸ்பெசல் டம்ளரில் சரக்கை ராவாக அடித்து கொண்டிருக்கிறார்கள்.இன்னும் அதற்கும் ஒரு படி மேலே போய் பெண்களை அரவனைப்பவர்களும் உண்டு.அந்த சமயத்தில் மட்டும் மாலையை கழற்றி விட்டு தப்பை செய்து முடித்த பின்,இம்மாதிரி தப்பை செயபவர்களுக்கேன்றே உருவாக்கப்பட்ட வாக்கியமான ''அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் நாங்கள் செய்த தவறை மறந்து மன்னித்து விடு ஸ்வாமியே'' என்றதை ஒரு தடவை ஓதி விட்டு மறுபடியும் மாலையை அணிந்து கொள்கிறார்கள்.இப்போது கார்த்திகை மாதம் சபரிமலை சீசன் நடந்து வருவதால் எங்கெங்கு காணினும் அய்யப்ப சாமியடா என்பது போல் எல்லா பாருக்குள்ளும் கூட சாமியடா என்றும் சொல்லலாம்.குடிப்பதே மது.......இதில் தனி ஸ்பெசல் கிளாஸ்  '''தூத் தேறி'' .....
                                                                மாலையையும் போட்டு கொண்டு இந்த கருமங்களையும் தொடர்ந்து செய்வதற்கு பதில்...மாலை அணியாமலே இருந்து விடலாம்..மாலை அணிவதால் மட்டும் என்ன புண்ணியம் இவர்களுக்கு கிடைத்து விடப் போகிறது...இவர்கள் எல்லாம்  ஐயப்பன் சந்நிதானத்தில் உள்ள பதினெட்டு படி ஏறவே தகுதி இல்லாதவர்கள்.இவர்கள் செய்யும் இந்த காரியத்தால் அனைத்து அய்யப்ப பக்தர்களுக்கும் அவபெயரை உண்டாக்குகிறார்கள் இந்த கழிசடைகள்..பலர் மாலை போட்டு கொண்டு இவைகளை செய்வதை ஒரு பெருமையாகவே நினைக்கிறார்கள்.அனைவரின் முன்பும் மாலை அணிந்த தோற்றத்துடன் பாரில் அமர்ந்து சரக்கடித்து கொண்டும்,பேசக் கூடாதவைகளை பேசிக்கொண்டும்,செய்யக் கூடாதவைகளை செய்து கொண்டும்
இருக்கும் இவர்களால் அய்யப்பனுக்கு என்ன லாபம்?.மேலும் பலர் எப்படா சபரிமலைக்கு போயிட்டு வந்து மாலைய கழட்டீட்டு தண்ணி அடிப்போம் என்று ஐயனை தரிசிப்பதை விட பிராந்தியை தரிசிப்பதற்கு ஆவலாய் இருப்பார்கள்.
                                                                           எதற்கு இவர்கள் வெட்டி பந்தாவுக்காக மாலை அணிந்து தேவையில்லாமல் காசை செலவு செய்து சபரிமலை சென்று கொண்டு?அதற்க்கு பேசாமல் இங்கேயே எப்போதும் போல் ஜாலியாக சரக்கடித்துக் கொண்டும்,ஊர் சுற்றிக் கொண்டும் இருக்கலாமே?.இம்மாதிரி ஆட்களால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் கிடையாது.மேலும் கோவிலிலும் கூட்டமாவது குறையும்.உண்மையான பக்தர்கள் நிம்மதியாக நெரிசல் இல்லாமல் தரிசனம் செய்வார்கள்.கன்னி சாமிகள் வரத்து குறையும்.அய்யப்பனும் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவார் அல்லவா?.அய்யப்பனிடமும் இந்த மாதிரி போலி பக்தர்கள் அதிகரித்திருப்பது வேதனைக்குரியது.மேலும் இது ஐயப்பனுக்கும்,சபரி மலைக்குமே மிகப் பெரியதொரு அவமானமாகும்.இந்த கடவுள் இப்படித்தான்,இவருக்கு இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் உண்டு,என்று இருக்கும் போது அவைகளை எதையுமே மதிக்காமல் கோவிலுக்கு மட்டும் வருவேன் என்றால் அப்புறம் எதற்கு கட்டுப்பாடு,விதி முறைகள்,சடங்குகள்.பேசாமல் அனைத்தையும் காற்றில் பறக்க விட்டு விட்டு அப்படியே கோவிலையும் இழுத்து மூடி விட்டு போய் விடலாம்.இப்படி பட்ட போலி பக்தர்கள் பெருகி வரும் இந்த வேலையில்,இதை இப்படியே விட்டால் நாளை ஐயப்பனுக்கும் ஒரு கட்டிங் ஏற்றி விட்டு ''வ குவாட்டர் கட்டிங்'' படத்திற்கு இரண்டாம் ஆட்டத்திற்கு அழைத்து போவார்கள் இந்த புண்ணிய வான்கள்.
                                                                 இதை இப்படியே விட்டு விட்டால் நாளை அய்யப்ப பக்தர்கள் என்றாலே காறித்துப்பும் நிலை ஏற்பட்டு விடும்,அய்யப்ப மாலை அணிந்தோர் என்றாலே அவர்கள் விரதமிருந்து மாலை அணிந்திருக்கும் போதே தண்ணி அடிப்பவர்கள்,அனைத்து விதமான கெட்ட காரியங்களையும் செய்பவர்கள் என்றாகி விடும்.ஆகவே அரசாங்கமோ அல்லது கோவில் நிர்வாகத்தரோ இதற்கு ஏதேனும் ஒரு வழியை கண்டு பிடித்து அனைத்து உண்மையான அய்யப்ப பக்தர்கள் மனதிலும் பாலை வார்ப்பார்களாக.....இதை நிறைவேற்றுவோருக்கு ஐயப்பனின் ஆசீர்வாதமும்,மற்றும் பக்தர்களின் ஆதரவும் பெருக வேண்டுமென உண்மையான அய்யப்ப பக்தர்களின் சார்பிலும்,மாலை அணிந்திருக்கும் என் நண்பர்கள் கேட்டு கொண்டதற்கினங்கவும் இதை எழுதுகிறேன்...
பதினெட்டு படி
                             நாற்பது நாட்கள் கூட கெட்ட பழக்கங்களை விட முடியாதவர்களுக்கு மாலை எதற்கு?,சபரிமலை எதற்கு?,அய்யப்ப தரிசனம் எதற்கு?.நாற்பது நாட்கள் கெட்ட பழக்கங்களை விட்டு விரதமிருக்கும் நபர்கள் அந்த நாற்பது நாட்களுக்கு பின் அந்த தீய பழக்கங்களை விட்டு விடும் மன உறுதி அடைகின்றனர்.அதற்காகவே ஏற்பட்டது தான் இந்த கட்டுப்பாடு.நாற்பது நாட்கள் கழிந்து தங்களிடமுள்ள கெட்ட பழக்கங்களையெல்லாம் மறந்து விட்டவர்கள் உண்டு..மாலையணிந்த நிலையிலேயே சரக்கடித்து ரோட்டில் விழுந்து கிடப்பவர்கள் அநேகம்.இதைக் கண்டு முகம் சுளித்து செல்பவர்கள் நிறைய பேர் உண்டு.ஒவ்வொரு அய்யப்ப சீசனிலும் இதை நீங்கள் காணலாம்.இந்த சீசனில் நான் தினமும் மூன்று அல்லது நான்கு பேரை தினமும் சாலையில் காண்கிறேன்.இந்த நிலை தமிழ்நாட்டில் மட்டுமா? அல்லது வேறு மாநிலங்களிலும் உண்ட என்பது தெரியவில்லை.அனேகமாக இது தமிழ்நாட்டில்தான் அதிகம் என நினைக்கிறேன்.இந்நிலை தொடர்ந்தால் நாளை கேரளத்தில் அனைத்து சேட்டன்மார்களும் நம்மை கோவிலை விட்டு வெளியே போடா பட்டி என்பார்கள்.ஆகவே இந்த நிலை தொடராதிருக்க மன,உடல் கட்டுப்பாடு இல்லாதவர்கள் தயவு செய்து மாலை அணிய வேண்டாம்.அப்படி நீங்கள் மாலை அணிந்தாலும் அது அதற்க்குண்டான பலனை பெறாது..மேலும் இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் தங்கள் தாங்கள் தெரிந்தவர்களிடமோ,நண்பர்களிடமோ இதை சொல்லினால் அவர்களுக்கு விரதமிருந்து,நாற்பது நாட்கள் மாலையணிந்து சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்கும் உண்மையான பக்தர்களின் பலனை அடைய அய்யப்பன் அருள் புரிவாராக.

Saturday, November 27, 2010

மின்சாரக் கனவு....! - ஒரு சிறப்புக் கண்ணோட்டம்

              தலைப்பை  பார்த்தவுடன் டென்சனாக வேண்டாம்.இது அரவிந்த சாமி,பிரபு தேவா,கஜோல் நடித்த 15 வருடங்களுக்கு முன்பு வந்த திரைப்படத்தைப் பற்றியது அல்ல.ஏனென்றால் அதைப் பற்றி பல பேர் விமர்சனம் என்ற பெயரில் கிழித்து எடுத்து விட்டார்கள்.பின்பு எதைப் பற்றியது என்கிறீர்களா?.இந்த மின்சாரகனவு கடந்த 4 வருடங்களாக தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கலைஞர் தயாரிப்பில்,ஆற்காடு வீராசாமி அவர்களின் இயக்கத்தில்,திரு ஆற்காடு வீராசாமி அவர்களே கதாநாயனகவும் நடித்திருக்கும் ''மின்சாரமே கனவு'' என்ற திரைப்படத்தை பற்றியது..இதன் மூலம் இயக்குனர்கள் கதாநாயகர்கள்  ஆகும் வரிசையில் இவரும் சேர்ந்துள்ளார்.மேலும் இந்த திரைப்படத்தில் தமிழக மக்கள் அனைவரும் சிறப்பு பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷங்கர்,ரஜினியின் எந்திரனையும் மிஞ்சும் வகையில் மிகப் பிரம்மாண்டமான தயாரிப்பாக வெளி வந்து கடந்த 4 வருடங்களாக வெற்றிகரமாக தமிழகத்தில் ஓடிக்  கொண்டிருக்கிறது.இதை மிகச் சிறப்பான முறையில் தயாரித்திருக்கும் தயாரிப்பாளரையும்,அருமையான முறையில் இதை இயக்கியிருக்கும் இயக்குனரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.இதை வெற்றிப் படமாக ஆக்குவதற்கு இருவரும் மிகக் கடினமான உழைப்பை இப்படத்தில் கொட்டியிருக்கிறார்கள்.தயாரிப்பாளரும் இத்திரைப்படத்தில் ஒன்றிரண்டு காட்சிகளில் தோன்றி ரசிகர்களை பரவசப்படுத்தி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  
                                          சரி இனி கதைக்கு வருவோம்.இப்படத்தில் கதை என்னவென்றால் இது ஒரு முற்றிலும் புதிய,இது வரை வெளி வராத,ஆங்கில படங்களுக்கு நிகரான ஒரு கதையாகும்.கதையில் அவரை அனைவரும் செல்லமாக ஆற்காட்டார் என்று அழைக்கின்றனர்.எனவே நாமும் இனி அவரை அவ்வாறே அழைக்கலாம். கதைப்படி இயக்குனர்,கதாநாயகர் ஆற்காட்டார்  அவர்கள் தமிழகம் முழுவதிலும் மின்சாரம் தயாரிக்கும் தொழிற்சாலைகளை வைத்துள்ளார்.தினமும் அதில் தயாரிக்கும் மின்சாரத்தை மாதக் கட்டண அடிப்படையில் தமிழக மக்களுக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்.இந்த இடத்தில இன்னொரு கவனிக்கத் தக்க விஷயம் என்னவென்றால்,ஹீரோவே வில்லனாகவும் நடிக்கும் ஆன்டி ஹீரோ வேடத்தை ஏற்றிருக்கிறார்.இது போன்ற பாத்திரத்தில் முன்பே பலர் நடித்திருந்தாலும் இவரளவிர்ற்கு எவருமில்லை என்னுமளவுக்கு மிகச் சிறப்பாக தான்  கொண்ட வேடத்தை செய்திருக்கிறார்.இப்போது கதைக்கு வருவோம்.இவ்வாறு மின்சாரத்தை விற்று அனைவரும் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது சிறு தடங்கல் ஏற்படுகிறது.கதாநாயகனை சுற்றி இருக்கும் நபர்கள்,நாம் தயாரிக்கும் மின்சாரத்தை நாம் ஏன் இவர்களுக்கு விற்று கொண்டிருக்க வேண்டும்?இவர்கள் நமக்கு என்ன செய்தார்கள்?,என்று உசுப்பேற்றி விட
கதாநாயகனும் இனி இவர்களுக்கு நான் கொடுப்பதுதான் மின்சாரம் என்று கிளம்புகிறார்.மின்சாரத்தை கண் மண் தெரியாமல் உபயோகப்படுத்தி,கண்டதற்கு எல்லாம் கரண்ட்,
பகலிலேயே பல்ப்,என்று சொகுசாக மின்சாரத்தை பயன்படுத்தி பழகி விட்ட,தமிழக மக்களிடம் சென்று ஆற்காட்டார் அவர்கள்,இனி நான் எப்படி,எவ்வளவு மின்சாரம் தருகிறேனோ அதைத்தான் நீங்கள் உபயோகிக்க வேண்டும்.ஒரு நாளைக்கு 2 மணி நேரம் வீதம் மூன்று முறை நான் மின்சாரம் அளிப்பதை நிறுத்துவேன்,மீதி இருக்கும் நேரங்களில் மட்டுமே நீங்கள் மின்சாரத்தை உபயோகப்படுத்த வேண்டும் என்கிறார்.
                   என்னதான் மின்வெட்டு மக்களுக்கு பழகி போயிருந்தாலும் இது போல மின்வெட்டை அனுபவித்ததில்லை.ஆகவே கடும் அதிர்ச்சியடைந்த மக்கள் ஆற்காட்டாரை கேள்வி மேல் கேள்வி கேட்டு வருத்தேடுக்கின்றனர்.மேலும் மற்ற தொழிற்ச்சாலை அதிபர்களான அம்மா என்றும் ஜெ என்றும் மக்களால் அழைக்கப்படும் ஜெயலலிதாவும்,கேப்டன் என்று அழைக்கப்படும் புரட்சி கலைஞர் கருப்பு எம்.ஜி.ஆர் விஜயகாந்தும்,மற்ற சிறு குழுக்களின் தலைவர்களும் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்,அறிக்கை,வேலை நிறுத்தம் என பல ஸ்டன்ட் காட்சிகளை செய்து கதாநாயகனுக்கும்,அவரது குருவுக்கும் பலவித தொல்லைகளை தருகின்றனர்.இவர்களின் இன்னல்களை தாங்க முடியாமலும்,மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமலும் கதாநாயகன் தன் உதவிக்கு தனது குருவை அழைக்கிறார்.இந்த குரு வேடம் ஏற்றிருப்பவர் வேறு யாரும் அல்ல ,நமது தயாரிப்பாளர் கலைஞர் அவர்கள்தான்.அவரிடம் சென்று பிரச்சினையை விளக்கி கூறும் கதாநாயகன் என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்கிறார்.கதாநாயகனின் குருவும் மக்களிடம் சென்று நமது தொழிற்சாலைக்கு தேவையான மூலப்போருல்களான காற்று,மழை போன்றவை தட்டுப்பாடாக உள்ளதால் மின்சாரம் தயாரிக்க முடியவில்லை எனவும் இவை கிடைத்ததும் மீண்டும் மக்களுக்கு தங்கு தடையில்லாமல் மின்சாரம் கிடைக்கும் எனவும் கூறச் சொல்கிறார்.நமது கதாநாயகன் அவர்களும் அவ்வாறே மக்களிடம் சென்று கூறுகிறார்.ஏதோ ஓரளவிற்கு சமாதானமான மக்கள் அதை நம்பி சோகமாக திரும்ப செல்கிறார்கள்.இந்த இடத்தில் ஒலிக்கும் ''விடுகதையா இந்த வாழ்க்கை,விடை தருவார் யாரோ''என்ற பாடல் காட்சியுடன் மிகவும் ஒன்றி போய் உள்ளது.இதே பாடலை ''இருள்தான் இந்த வாழ்க்கையா?,ஒளி தருவார் யாரோ?''என்று ரீ-மிக்ஸ் செய்தவிதம் அருமையிலும் அருமை . இப்படியாக குறைந்த மின்சாரத்துடன் மக்கள் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் போது,பல புதிய கம்பெனிகள் தோன்றி யுபிஸ்,பாட்டரி,ஜெனரேட்டர் போன்ற புதிய மின் சாதனங்களை மக்களுக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன.இதைப் பார்த்த கதாநாயகன் இப்படியே போனால் மக்கள் தங்களுக்கு ஆதரவளிக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்டு ஒரு புதிய யோசனையில் இறங்குகிறார்.அவரும் அவர் குருவும் ஆலோசனை நடத்தி மக்களிடம் இனி உங்களுக்கு மின்சாரம் தடையில்லாமல் வழங்கப்படும் எனவும்,ஆனால் அதே சமயம் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் வீதம் மட்டுமே மின்சாரம் இருக்காது.மேலும் மாதத்தில் ஓரிரு நாட்கள் மட்டும் பத்து மணி நேரம் இருக்காது என்று சொல்கிறார்கள்.முற்றிலும் குழம்பி போயுள்ள மக்கள்,தெரியாத பேய்க்கு தெரிந்த பிசாசு எவ்வளவோ மேல் என்று ஏற்று கொள்கிறார்கள்.இனி மக்களின் நிலை என்ன ?எனும் கேள்வி எழும் நேரத்தில்  இடைவேளை விடப்படுகிறது.படத்தை விட இடைவேளையில்
காட்டப்படும் தயாரிப்பாளர் கலைஞர் அவர்கள் நடித்த விளம்பரப் படங்கள் அனைவரையும் கவர்கிறது.இலவச டிவி,வீட்டு மனை,மருத்துவ காப்பீட்டு திட்டம் போன்ற பல விளம்பரங்கள் மக்கள் மனதை கொள்ளை கொள்கிறது.இடைவேளை வரை சூடாகவும் சுவையாகவும் சென்று கொண்டிருக்கும் திரைப்படத்தில் பின்பு மிகவும் இழுவை.மக்கள் ஏதோ இதுவாவது கிடைத்ததே என்று வாழ பழகி விட்டதாலும்,கதாநாயகன் மற்றும் அவர் குருவுக்கும் வேறு பல பிரச்சினைகள் இருப்பதாலும் கதையில் சுவாரசியம் குன்றி விட்டது.மேலும் கதாநாயகனின் குருவாகிய கலைஞர் தனது சாதுர்யத்தை பயன்படுத்தி அம்மா தனது பண்ணை வீட்டில் ஓய்வெடுக்க செல்வது போல் காட்டி காட்டி அவரை முடக்கி விடுகின்றனர்.அடுத்து தொடர்ந்து தனது அறிக்கைகளால் தொந்தரவு கொடுக்கும் கேப்டனையும் டம்மியாக்கி விடுகின்றனர்.கேப்டன் திரையில் தோன்றும் போது ரசிகர்கள் ஆரவாரமிட்டு வரவேற்கின்றனர்.அவர் மூலம் எதாவது திருப்பம் நிகழும் என எதிர்பார்க்கின்றனர்.ஆனால் ஆரம்பத்தில் பறந்து பறந்து அந்தரத்தில் சுற்றி சுழன்று சண்டையிடும் அவரை,அவருக்கு சொந்தமான திருமண மண்டபத்தை இடிப்பத்தின் மூலம் அடக்கி வாசிக்க வைக்கிறார்கள்.பொதுமக்களும் தங்களுக்காக குரல் கொடுக்க யாரும் இல்லை இனி நாமாகவே போராடுவோம் என்று களத்தில் குதிக்கும்போது தனது ராஜ தந்திரத்தின் மூலம் வேறு பல பிரச்சினைகளை மக்களுக்கு உண்டாக்கி அவர்களை அடக்குகிறார் கலைஞர் அவர்கள்.  உலக திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக முடிவு என்ற ஒன்று இல்லாத திரைப்படம் இது.முடிவு தெரிய வேண்டுமெனில் இத்திரைப்படத்தை இன்னும் ஒரு வருடம் தொடர்ந்து காணுங்கள்.தற்போது வரை கதாநாயகன் நடத்தி வரும் மின்சாரத் தொழிற்சாலை மேலும் அவர் வசமே இருக்குமா?அல்லது குருவிடம் சென்று சேருமா?இல்லை இருவருக்குமே இல்லாமல் புதியவரிடம் சென்று சேருமா?மக்கள் குறை தீர்க்கப்படுமா?
இது போன்ற பல கேள்விகள் இத்திரைப்படத்தை காணுவோர் மனதில் எழுகின்றது.இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் ஜூன் மாதம் வெளி வருகிறது.அப்போது அனைத்து கேள்விகளுக்கும் இரண்டாம் பாகத்தில் விடை கிடைக்குமென எதிர் பார்க்கபடுகிறது.
                                                          இதில் நடிப்பு எனும் வகையில் பார்க்கும் போது,கதாநாயகனின் நடிப்பு அவ்வளவு சிறப்பு இல்லை.பல இடங்களில் அவர் சமாளிக்க முடியாமல் திணறுவது வெளிப்படையாக தெரிகிறது.சில இடங்களிலே வந்தாலும் தயாரிப்பாளர் கலைஞர் அவர்களின் நடிப்பு மெய் சிலிர்க்க வைக்கிறது.அவர் வரும் இடங்கள் அனைத்தும் காமெடி,சோகரசம்,குடும்ப பாசம்,வீரம் என அனைத்தையும் அள்ளி தெளிக்கிறார்.இதனால் அவரை பார்த்ததும் மக்கள் எழுப்பும் ஒலி கொட்டகையையும் தண்டி வெளியே எதிரொலிக்கிறது.மேலும் அவரே இத்திரைப்படத்திற்கு கதை,வசனம்,பாடல்கள்,இசை போன்ற பல வேலைகளையும் சேர்த்து செய்துள்ளார்.என்னதான் ஆற்காட்டார் இதில் கதாநாயகனாகவும்,இயக்குனராகவும் இருந்தாலும் தயாரிப்பாளர் அவரை அடக்கி வாசிக்கும்படி அறிவுறுத்திய காரணத்தினால்,அவரால் தன் பங்கை சரிவர நல்க முடியவில்லை.இதில் கதாநாயகி இல்லாத குறையை அம்மா அவர்கள் தீர்த்து வைக்கிறார்.மேலும் இதில் அம்மா மற்றும் கேப்டன் என இருவர் இருந்தும் ஆக்சன் கட்சிகளுக்கு பஞ்சமோ பஞ்சம்.நமது ரசிகர்களும் கேப்டனின் சுவரில் தாவி தாவி எதிரியை அடிக்கும் கால் சண்டை இல்லாததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.மேலும் மக்கள் இதில் கௌரவ வேடம் ஏற்று நடித்திருப்பது நன்றாக இல்லை.ஏனெனில் படத்தில் உண்மையான கதாநாயகர்கள் அவர்கள்தான்.
                                    வைகோ அவர்களும் இத்திரைப்படத்தில் உள்ளார் என்பது ஆச்சரியமாக உள்ளது.ஏனென்றால் அவர் திரையில் குறைவாக தோன்றினாலும் தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பாத்திரம் என்னவென்றே தெரியாமல் அவர் குழம்பி உள்ளது தெரிகிறது.அதனால் அவர் தனது திறமையை வெளிப்படுத்த இயலவில்லை.சிறு சிறு போராட்டங்களில் பங்கு கொண்டு தானும் கதாநாயகனுக்கு தொந்தரவு தரலாம் என எண்ணி செயல்படும்போது,கதாநாயகனின் குரு அவரை வேறு பல போராட்டங்களோடு தொடர்பு படுத்தி விட்டு அவரை முடக்குகிறார்.இந்திய அரசின் நமது காடுகளில் இருக்கும் புலிகளை காக்கும் திட்டம் பற்றி பேசாமல்,இலங்கையில் உள்ள காட்டு புலிகளை பற்றி பேசுகிறார் என்று அவரை குற்றம் சாட்டுகின்றனர்.ஆகவே அவரும் தன் பங்கை அதோடு முடித்து கொள்கிறார்.மேலும் இவர் அம்மாவோடு நட்புறவு கொண்டிருப்பதால் அவர் சொல்வதை கேட்க நேரிடுகிறது.
                                   இத்திரைப்படத்தில் பல குறைகள் இருந்தும் காண்பதற்கு இனிய ஒரு ஒப்பற்ற காவியமாகும்.படத்தில் மொத்தம் 5 பாடல்கள்.அனைத்தும் சோகரசம் ததும்பும் பாடல்கள்.இருளுக்குள் இருக்கும் மக்கள் ''எங்கே சென்றாயோ?''  என்று கரண்ட் கம்பத்தை பார்த்து பாடும் பாடல் ஒன்றே போதும் இசை அமைப்பாளரின் திறமையை அறிய.கீரவாணி ராகத்தில் இது போல ஒரு பாடல் வந்ததில்லை எனும் அளவிற்கு இந்த மெட்டு மக்களால் விரும்பப்படுகிறது.மேலும் தங்கள் வீட்டில் டிவி,ஏசி,டிவிடி,போன்ற பல பொருட்களை வைத்திருக்கும் மக்கள் அவைகளை உபயோகிக்க மின்சாரம் இல்லாமல் புலம்பி பாடும் பாடலான ''சோதனை மேல் சோதனை'' பாடலும்,தங்கள் தேர்வு சமயத்தில் வீட்டில் மின்சாரம் இல்லாத காரணத்தால் படிக்க முடியாமல் திணறும்  சிறுவனும் சிறுமியும் வீட்டில் உள்ள கரண்ட் கம்பிகளை பார்த்து ''வாராயோ வாராயோ''எனப் பாடும் பாடலும் படத்திற்கு வலு சேர்க்கும் பாடல்களாக உள்ளன.அம்மா,விஜயகாந்த் மற்றும் வைகோ அவர்கள் ஆகிய மூவரும் பாடும் ''வெற்றி கொடு'' என்ற பாடல் மிகவும் சிறப்பான முறையில் படமாக்கப்பட்டுள்ளது.இவர்கள் மக்களை பார்த்து பாடுவதாக இந்த பாடல் அமைந்துள்ளது.கலைஞர் மற்றும் கதாநாயகன்,தங்கள் குடும்பத்தோடு பாடும் பாடலான ''எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை''என்ற பாடல் ஒன்று மட்டுமே மகிழ்ச்சி பாடலாகும்.இந்த பாடல் காட்சியில் நடிப்பதற்காக சுமார் இருநூறு துணை நடிகர்கள் அழைத்து வரப்பட்டிருக்கின்றனர்.இந்த ஒரு பாடல் காட்சியைத் தவிர,படம் முழுவதும் மின்சாரம் இல்லாத காரணத்தால் காட்சிகள் அனைத்தும் இருளாகவே இருக்கின்றன.சுமாரான ஒளிப்பதிவு தான் .கதாநாயகன் பல தவறுகளை தவிர்த்திருந்தால் படம் தேசிய விருதையோ அல்லது ஆஸ்கார் விருதையோ பெற்றிருக்கும்.எடிட்டிங் எனும் படத்தொகுப்பில் விருவிருப்பில்லை.காட்சிகள் மெதுவாக நகர்வது போலுள்ளது.மனதை மயக்கும் காதல் காட்சிகளோ,ஆக்சன் காட்சிகளோ இல்லாதது ஒரு குறையே.ஆனாலும் இந்தப் படம் பல வருடங்களாக நேரம் மட்டும் அவ்வப்போது மாறிக் கொண்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
                                              என்னதான் வெற்றிப்படமாக இருந்தாலும் அனைவரும் இதை பார்ப்பதை தவிர்க்க முயற்சி செய்து தோல்வியுருகின்றனர்.மொத்தத்தில் மின்சாரமே கனவு தயாரிப்பாளருக்கும்,கதாநாயகனுக்கும் பேரை வாங்கி கொடுத்தாலும்,ரசிகர்கள் மத்தியில் ஆதரவை பெற முடியவில்லை.இதை காண வரும் ரசிக கண்மணிகளுக்கு சோகத்தை மறக்க  குவார்ட்டர் கட்டிங் எனும் குறும்படம் காட்டப்படுகிறது.இத்திரைப்படத்தை அனைவரும் இலவசமாக பார்க்க தினமும் இரண்டு மணி நேரம் அவரவர் இல்லத்திலும்,அலுவலகத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சில நேரங்களில் நாம் சற்றும் எதிர் பாராத நேரத்திலும்,நடு இரவிலும் இது காட்டப்படுகிறது.அனைவரும் தவறாது இதற்கு ஆதரவளிக்க வேண்டுமென தயாரிப்பாளர் தரப்பு விளம்பரங்களை ஒலி,ஒளி பரப்பி வருகிறது.என்னதான் விளம்பரங்கள் மூலம் மனதை மயக்கினாலும் படம் எங்களுக்கு பிடிக்கவில்லை எனக்கூறுகின்றனர் ரசிகர்கள்.
                                                         எப்படி இருந்தாலும் படம் ரசிகர்களின் மனதை கவரவில்லை என்பது தெரிகிறது.மின்சாரமே கனவு - வெறும் கனவு....

                                                                                 நமது விமர்சனக் குழு.
 

செம்மொழியான தமிழ் மொழியே......

       தற்காலத்தில் உலகில் அழிந்து வரும் மொழிகளின் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் சிறப்பு நம் தமிழுக்கும் உண்டு.தமிழ்நாட்டில் 7 கோடி பேர் உள்ளனர்.அதில் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் 6 கோடி பேராவது இருப்பார்கள்.அப்புறம் எப்படி தமிழ் அழியும் என்று நினைப்பவர்களுக்கு,நாம் தற்போது பேசிகொண்டிருப்பது தமிழ் அல்ல.தமிங்க்லிஷ் எனும் ஆங்கிலத்தையும் தமிழையும் கலந்து பேசும் புது மொழி.50 வருங்களுக்கு முன்பு இருவர் பேசினால் அதில் ஆங்கில வார்த்தைகளை தேட வேண்டும்.இப்போது யாராவது பேசினால் தமிழ் வார்த்தைகளை தேட வேண்டி உள்ளது.கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலம் தமிழை விழுங்கி கொண்டிருக்கிறது.பல வார்த்தைகளை இழந்து,புது வார்த்தைகளுக்காக அயல் மொழியை நாடி சென்று கொண்டிருக்கிறது தமிழ்.தமிழ்நாட்டில் தமிழோ அல்லது வேறு மொழியோ எழுத படிக்க தெரியாதவர்க்கு கூட ஆங்கிலத்தில் சர்வ சாதாரணமாக 100 அல்லது 200 வார்த்தைகள் தெரியும்.பஸ்,போன்,கார்,டிக்கெட்,சினிமா,ரோடு போன்ற பல வார்த்தைகள் இன்று தமிழ் வார்த்தைகள் ஆகி விட்டன.உண்மையில் பல பேர்களுக்கு பல ஆங்கில வார்த்தைகளின் தமிழ் அர்த்தம் தெரியாது.தமிழ் பேச இன்று உள்ள இளம் தலைமுறையினர்க்கு தயக்கம்,வெட்கம்,கூச்சம்.நன்றி என்று தமிழில் சொல்ல கசக்கிறது.அதே சமயம் தேங்க்ஸ் எனும் போது இனிக்கிறது.இதுதான் இன்றைய நிலை.2000 ஆண்டு  பாரம்பரியம் உள்ள ஒரு மொழி 200 வருட பாரம்பரியம் உள்ள மொழியிடம் அடிமையாக உள்ளது.உண்மையில் தமிழர்களின் ஊரான தமிழ்நாட்டை விட ஸ்ரீலங்கா,மலேசியா,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழின் நிலைமை எவ்வளவோ பரவாயில்லை எனலாம்.
                                            தமிழர்கள் சற்று அதிகமாகவே தாழ்வு மனப்பான்மையும்,அடிமை மனப்பான்மையும் கொண்டவர்கள்.ஆகவே ஆங்கிலத்தின் மேல் மோகம் கொண்டதில் வியப்பு இல்லை.ஆங்கிலேயர்கள் நமக்கு விடுதலையை கொடுப்பது போல் கொடுத்து நம்மை இன்னும் அதிகமாக அடிமை படுத்தி கொண்டார்கள்.ஒரு பொருளை கொடுத்து அதை உபயோகப்படுத்த பழக்கி விட்டு,திடீர் என்று அதை பிடுங்கி விட்டால் எப்படி இருக்கும்.அதை போலேவே ஆங்கிலத்தையும் நமக்கு பழக்க படுத்தி விட்டார்கள்.உண்மையில் அவர்களுடையதை விட நம் பொருள் மேலானது என்று தெரியாமல் நாமும் அதற்க்கு அடிமையாகி விட்டோம்.எவன் ஒருவன் தன சொந்த தாய்மொழியை புறக்கணிக்கின்றானோ,அவன் அனாதைக்கு சமம்.ஆனால் இப்போது நடந்து கொண்டிருப்பது என்ன?.நமது தாய்மொழியை நம்மை விட அதிகமாக உபயோகப்படுதுபவர்களும்,காப்பவர்களும் அயல் மொழியினரே.நம் தமிழின் பெருமை ஆங்கிலேயர்களும்,ஐரோப்பியர்களும் சொல்லித்தான் நாமே அறிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.சமீபத்தில் நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டில் பல வெளிநாட்டவர்களும் பேசியதில் இருந்துதான் நம் மக்கள் நம் மொழியை பற்றிய பல விசயங்களை அறிந்து கொண்டிருப்பார்கள்.அடுத்தவர் சொல்லித்தான் நம் மொழியை பற்றிய தகவல்களை நாம் அறிந்து கொள்ளுவது மிக பெரிய கொடுமை.மிக சாதாரணமான சில விசயங்கள் கூட இன்றைய தலைமுறையினர் தமது மொழியை பற்றி அறிந்து கொள்வது இல்லை.அப்படியே மீறி தமிழ் தெரிந்தாலும் அதில் ஆயிரம் தவறுகள்.இன்று பல பள்ளிகளும் தமிழை கற்பிப்பதில் ஆர்வம் காட்டுவது இல்லை.அப்படியே நல்ல பள்ளிகள் இருந்தாலும் அதில் யாரும் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பது இல்லை.ஏனென்றால் அவர்களை பொறுத்த வரையில் தமிழ் பள்ளிகள் தரம் குறைந்தவை,ஆங்கிலம் மற்றும் தமிழை தவிர வேறு மொழிகளை சொல்லி தரும் பள்ளிகளே சிறந்தவை என்ற நினைப்பு.தாய்மொழியை நன்றாக அறியாமல் எந்த மொழியையும் கற்பது வீண்.தன் தாய்மொழியை நன்கு கற்று கொண்ட ஒருவரால் எந்த மொழியையும் மிக எளிதாக கற்று தேற முடியும்.
                           இன்றிருக்கும் பல பள்ளிகள் தமிழையும் சரிவர கற்று தராமல் மற்ற மொழிகளையும் சரிவர கற்று தராமல் மாணவர்களை அரைகுறை ஆக்கி கொண்டிருக்கின்றன.ஆங்கில வழி பள்ளியில் படித்த முக்கால் சதவிகிதம் பேர் தமிழும் அரைகுறையாய் ஆங்கிலமும் அரைகுறையாய் தடுமாறி கொண்டிருக்கிறார்கள்.ஆனாலும் கவலையில்லை,ஏனென்றால் தமிழ் நாட்டில்தான் தமிழே தெரியாமல் ஒருவர் பிறந்தது முதல் இறப்பது வரை வாழ முடியுமே,அப்புறம் எதற்கு கவலை.தமிழ் படிப்பதெல்லாம் சுத்த வீண்,தமிழ் படித்தாலோ,தமிழில் படித்தாலோ தங்கள் வாழ்க்கை சிறக்காதென்றும்,வேலைவாய்ப்பு கேள்வி குறி ஆகி விடுமோ என்ற பயமும்,தயக்கமும் இன்றைய இளைங்கர்கள்  மனதில் உள்ளது.ஒருவர் தமிழில் படிக்க ஆசைபட்டாலும்,சுற்றியிருப்போர் அவரிடம் ஏதேனும் ஒன்றை சொல்லி அச்சமுற செய்து விடுகின்றனர்.தற்போதைய அரசு தமிழ்நாட்டில் தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க படும் என்ற சட்டம் ஒன்றை உருவாக்கி உள்ளது.நல்ல சட்டம் தான்.ஆனால் இது எந்த அளவிற்கு செயல்படுத்தப்படும் என்பது போக போகதான் தெரியும்.அப்படி இச்சட்டம் சிறப்பாக செயல் படுத்தப்பட்டாலும் இது அடுத்த ஆட்சியிலும் நடைமுறை படுத்த பட வேண்டும்.அப்போதுதான் இந்த சட்டத்தை இயற்றியதற்கு சிறப்பு.இது ஒரு பக்கம் இருந்தாலும்,தமிழ்நாட்டில் தமிழ் வழி படித்தோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்,வேலைவாய்ப்பு அளிக்கப்படும்,என்ற ஒரு சட்டமே கேலிக்குரியதாக உள்ளது.
                                                                                                             ஏன் இந்த சட்டம்?.தமிழ் நாட்டில் தமிழ் படிக்க ஆட்களே இல்லையா?.உண்மையில் தமிழ் வழி கல்வி கற்றோர் சொற்ப எண்ணிக்கையில் தன உள்ளனர்.பள்ளி இறுதி வரை தமிழ் வழி கல்வி பயின்றோரும்,கல்லூரியில் ஆங்கில வழி கல்வியைத்தான் நாடுகின்றனர்.இதனால் இத்தனை நாள் தமிழ் வழியில் கற்றோர் திடீரென்று அனைத்தையும் ஆங்கிலம் வழி கற்கும் போது குழம்பி போய் விடுகின்றனர்.அவர்கள் தங்கள் கல்வியை முடிக்கும் போது பெயரளவிற்குத்தான் பட்டமே ஒழிய அவர்கள் தாங்கள் பயின்றதில் முழு அளவில் ஞானம் பெறுவதில்லை.இத்தகையோரை எந்த நிறுவனமும் வேலைக்கு அமர்த்திக்கொள்ள விரும்புவதில்லை.இதை போல் பல காரணங்கள் உண்டு.ஆனாலும் நல்லபடியாக படித்து முடித்து வருவோருக்கும் வேலைவாய்ப்பு அளிப்பதில்லை.தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒருவர் தன் சொந்த தாய்மொழியை படித்த காரணத்தினால் வேலையில்லாமல் இருக்க நேரிடும்.இது உண்மையிலேயே வேதனைக்குரிய விசயமாகும்.
                                                           இதுவரை நடந்தது எப்படியோ இருக்கட்டும்.இனி வரும் காலங்களிலாவது நம் மொழியை காப்போம்.மெல்லத் தமிழ் இனி சாகும் என்ற வாக்கை பொய்யாக்குவோம்.வரும் தலைமுறைக்காவது நல்ல தமிழை சொல்லி தருவோம்.நம் தாய்மொழியை நாமே போற்றா விட்டால் யார் போற்றுவார்.ஆகவே கற்போம் கற்பிப்போம் தமிழை.
                                      வெல்க தமிழ்,வாழ்க தமிழ்,வளர்க தமிழ்.....


                                            

Sunday, November 21, 2010

முதல் வணக்கம்

அனைவருக்கும் வணக்கம்,
                                                        இவ்வுலகத்தின் பேரில் கொண்ட அன்பினாலும் மதிப்பினாலும்,மனித நேயம் என்றும் மறக்க கூடாதென்றும் கூறுவதே என் கடமை.மக்களின் மனதில் அன்பையும் பண்பையும் வளர்ப்பதே என் பணி.எந்நாளும் நாம்,நாம் கொண்ட கடமையை மறக்க கூடாது.உங்கள் கடமை என்பது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.அது போக்குவரத்து விதிகளை மதிப்பதாக இருக்கலாம்,அல்லது பெற்றோரை காப்பதாக இருக்கலாம்,அல்லது சட்ட ஒழுங்கிற்கு  உட்பட்டு நடப்பதாக இருக்கலாம்.மொத்தத்தில் மனிதனாக இருக்க வேண்டும்.அனைவரும் கேட்கலாம்.நீ என்ன ஒழுக்கமா என்று?.ஒழுக்கமாக நடக்க நினைப்பதால் தான் இந்த பதிவு.அவரவர் தங்கள் பணியை சரிவர செய்தாலே போதும்,வேறொன்றும் வேண்டாம் உலகம் சிறக்க.தங்கள் பணியை செய்வதற்கே காசு கேட்கும் ஆட்கள் உள்ள இந்த உலகத்தில்,எதையும் எதிர் பாராமல் வேலை செய்வோரை ஊக்கபடுத்துங்கள்.அதுவே தங்களின் மிக சிறந்த பணியாகும்.எக்காலத்திலும் லஞ்சம் வாங்கவோ கொடுக்கவோ மாட்டேன் என்று உறதி செய்யுங்கள்.வரும் இளைய தலைமுறையிடம் ஊழல்,லஞ்சம் போன்றவை இல்லாதபடி ஆக்குவோம்.இதுவே நம் கடமையாக இருக்கட்டும்.
                              நமது தலைமுறைக்காக நாம் சுத்தமான உலகை விட்டு செல்வோம்.இல்லையேல் அவர்கள் நம்மை காரி துப்பும் நிலைமை வரும்.வருங்காலம் கணிக்க முடியாதது.ஆகவே நாம் முதலில் நம்மை சுத்தபடுத்துவோம்.நம்மால் முடிந்த அளவிற்கு தவறுகள் இல்லா  உலகை நம் சந்ததியினர்க்கு அளிப்போம்.
                                                            நன்றி,விரைவில் புதிய பதிவுகளுடன் சந்திப்பேன்.


                                                                          உங்கள் நண்பன் வேல்........